கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு தண்டனை: லட்சத்தீவு தேசியவாத காங். எம்.பி. தகுதி நீக்கம்

கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்றுள்ள லட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-01-14 17:21 GMT

தேசியவாத காங். எம்.பி.

நாடாளுமன்ற மக்களவைக்கு லட்சத்தீவு தொகுதியில் இருந்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு, 2014 மற்றும் 2019 என தொடர்ந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், முகமது பைசல் (வயது 47). இவர் உள்ளிட்ட 4 பேர், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான மறைந்த பி.எம்.சயீத்தின் மருமகன் முகமது சாலிஹை 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது கொல்ல முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

10 ஆண்டு தண்டனை

இது தொடர்பான வழக்கை லட்சத்தீவின் கவராட்டி செசன்ஸ் கோர்ட்டு விசாரித்தது. விசாரணை முடிவில் முகமது பைசல் எம்.பி. உள்ளிட்ட 4 பேர் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கோர்ட்டு கண்டறிந்தது. இதையடுத்து அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து கடந்த புதன்கிழமை தீர்ப்பு அளித்தது.

தகுதி நீக்கம்

லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் குற்ற வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளதால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதையொட்டி நாடாளுமன்ற மக்களவை செயலகம் முறைப்படி அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

லட்சத்தீவு நாடாளுமன்ற மக்களவை தொகுதி எம்.பி. முகமது பைசல், செசன்ஸ் வழக்கு எண். 1/2017-ல் கவராட்டி செசன்ஸ் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் தண்டனை பெற்ற நாளில் இருந்து (2022 ஜனவரி 11), லட்சத்தீவு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து இந்திய அரசியல் சாசனம் பிரிவு 102 (1)(இ) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ன் கீழ் தகுதி நீக்கம் செயய்ப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்