உதய்பூர் தையல்கடைக்காரர் கொலை; வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்ட உதய்பூரை சேர்ந்த தையல்கடைக்காரர் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

Update: 2022-06-29 06:49 GMT

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் தன்மண்டி பகுதியில் தையல் கடை நடத்தி வருபவர் கண்ணையா லால். இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்து சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கண்ணையா லாலின் தையல் கடைக்கு நேற்று வந்த இருவர் சட்டைக்கு அளவு கொடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் போல் வந்தனர். சட்டைக்கு அளவு எடுத்துக்கொண்டிருந்தபோது வாடிக்கையாளர்கள் போல் வந்திருந்தவர்களில் ஒருவர் கண்ணையாவை தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் கொடூரமாக தாக்கினார். கண்ணையாவின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதுடன் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கண்ணையாவை கொடூரமாக கொலை செய்த ஹவூஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தரி ஆகிய இரு குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து ராஜஸ்தான் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உதய்பூரின் சில பகுதிகளில் போராட்டங்கள், வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கண்ணையாவை கொலை செய்த ஹவூஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தரி ஆகிய இரு குற்றவாளிகளுக்கும் பாகிஸ்தானின் கராச்சியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பு தாவத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புடன் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தையல்கடைக்காரர் கண்ணையா லால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று நடத்த கண்ணையால் லாலின் கொடூர கொலை தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு எடுத்து நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏதேனும் அமைப்புகள், வெளிநாட்டு தொடர்புகள் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளதா? என்று முழுமையாக விசாரிக்கப்படும்.' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க... நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட நபர் தலைதுண்டித்து கொலை - கொடூர சம்பவம்

Tags:    

மேலும் செய்திகள்