தாயை கவனிக்க வேண்டும்; அமலாக்கத்துறையில் ஆஜராக கால அவகாசம் கேட்ட ராகுல்காந்தி

நேஷனல் ஹேரால்டு வழக்கில் நாளை ஆஜராகும்படி ராகுல்காந்திக்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2022-06-16 12:21 GMT

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி நிர்வாக இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையின் நேற்று 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். 3 நாட்கள் நடந்த விசாரணையில் ராகுல்காந்தியிடம் மொத்தம் 28 மணி நேரத்திற்கு மேல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளனர்.

அதேவேளை, கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை கவனிக்க வேண்டும் என ராகுல்காந்தி கோரிக்கை விடுத்ததால் இன்று ஒரேநாள் மட்டும் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (நாளை) மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத்துறை ராகுல்காந்திக்கு நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், நேஷனல் ஹேரால்டு வழக்கு விசாரணையில் நாளை ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி அமலாக்கத்துறையிடம் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதித்துள்ள தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் அவரை கவனிக்க வேண்டும் என்பதாலும் நாளை விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு நாளைக்கு பதில் திங்கட்கிழமை ஆஜராகுகிறேன் என்றும் அதற்கு அனுமதி தரும்படி அமலாக்கத்துறையிடம் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ராகுல்காந்தியின் கோரிக்கை தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்