அமெரிக்கர்களை நூதனமாக ஏமாற்றி பல கோடி மோசடி: கால் சென்டர் ஊழியர்கள் 84 பேர் கைது

நூதன முறையில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்த நொய்டா கால் சென்டர் ஊழியர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-25 22:59 GMT

நொய்டா,

அமெரிக்க நாட்டு குடிமக்களுக்கு அவர்களின் வருவாய் அடிப்படையில் அரசின் நல உதவிகள் வழங்கப்படுகின்றன. அதற்காக அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் ஒன்பது இலக்க சமூக பாதுகாப்பு எண் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த ஹர்ஷித் குமார், யோகேஷ் பண்டிட் என்ற இருவர், 'டார்க் வெப்' என்ற நிழல் இணையம் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்க குடிமக்களின் சமூக பாதுகாப்பு எண்களை பெற்றார்கள்.

அமெரிக்க அதிகாரிகள் போல பேசி

அவர்கள் நொய்டாவில் தொடங்கிய கால் சென்டரின் ஊழியர்கள், சுமார் 4 லட்சம் அமெரிக்கர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டார்கள்.

அமெரிக்க அதிகாரிகளைப் போல பேசிய அவர்கள், சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் காரணமாக அவர்களின் சமூக பாதுகாப்பு எண் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது. அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம் என்பதால், ஏற்கனவே அவர்களது கணக்கில் உள்ள தொகையை கிரிப்டோ கரன்சியாக மாற்றிக்கொள்ளலாம் என்று கூறி அதற்கான வழிமுறைகளை கூறியுள்ளனர்.

தினம் ரூ.40 லட்சம் மோசடி

அதை நம்பி செயல்பட்ட சுமார் 600 அமெரிக்க குடிமக்களின் பல கோடி ரூபாயை தங்களின் 'சைபர்' மோசடியில் சுருட்டியுள்ளனர்.

இந்த கால் சென்டரில் 38 பெண்கள் உள்பட 84 பேர் பணிபுரிந்துள்ளனர். மோசடி பற்றி தெரிந்தே, அதிக சம்பளம் காரணமாக உடந்தையாக இருந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்துவந்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த நொய்டா போலீசார், கால் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.

84 ஊழியர்கள் கைது

அப்போது 150 கணினிகள், ரூ.20 லட்சம் ரொக்கத்தொகை உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஊழியர்கள் 84 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கால் சென்டர் உரிமையாளர்கள் ஹர்ஷித் குமார், யோகேஷ் பண்டிட் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்