ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடியுடன் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சந்திப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியை சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இன்று சந்தித்து பேசினார்.

Update: 2023-09-11 06:24 GMT

புதுடெல்லி,

டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் (செப்டம்பர் 9 மற்றும் 10) ஜி-20 உச்சி மாநாடு நடந்தது. இதில் 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில், ஜி-20 உறுப்பு நாடுகளில் ஆப்பிரிக்க யூனியன் இணைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான, கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற ஒரு பெரிய வரலாற்று ஒப்பந்தம் பற்றி இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் அறிவித்தன.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டணி திட்டம் தொடங்கப்பட்டது. மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் உள்ளிட்டோர் பேசினர்.

இந்த நிலையில், ராஷ்டிரபதி பவனில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமரான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் கலந்து கொண்டார். அவர், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மற்றும் பிற மந்திரிகளை இன்று சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்