சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா பேட்டி

சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்பே சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி தொடங்கியுள்ளதாக முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-20 15:16 GMT

சிவமொக்கா;


ஈசுவரப்பா பேட்டி

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தயாராகி வருகிறது. ஆனால் காங்கிரசில் முதல்-மந்திரி வேட்பாளருக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அவர்களின் ஆதரவாளர்கள் மாறி, மாறி அடுத்த முதல்-மந்திரி என்று கோஷமிடும் அளவுக்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஈசுவரப்பா சிவமொக்காவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-மந்திரி பதவிக்கு போட்டி

கர்நாடக சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நடந்தால் தான் முடிவு அறிவிக்கப்படும். ஆனால் அதற்குள் காங்கிரசில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடைேய முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இது எப்படி உள்ளது என்றால், இன்னும் பெண் பார்த்து திருமணம் நடக்கவில்லை, ஆனால் அதற்குள் குழந்தைக்கு பெயர் வைக்க சண்டையிட்டு கொண்டார்களாம்.கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்