காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டால், எளிதில் வர்த்தகம் செய்வது மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்.;
புதுடெல்லி,
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக காப்பீட்டு சட்டங்கள் (திருத்த) மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை 74 சதவீதம் என்ற அளவில் அந்நிய நேரடி முதலீடு உள்ளது. இந்த மசோதா அறிமுகத்திற்கு பின்னர் காப்பீட்டு துறையில், 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் தங்களுடைய நிர்வாக விவகாரங்களை மேற்கொள்வது எளிமையடையும். முழு சுதந்திரத்துடன் அந்த பணிகளை மேற்கொள்ளும்.
2047-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை அடையும் அரசின் திட்டமும் இதனால் வலு பெறும். இதன்படி, சூழலுக்கு ஏற்ப வருகிற திங்கட்கிழமை அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என பெயர் வெளியிட விருப்பம் இல்லாத நபர் ஒருவர் கூறினார். நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே இதனை தாக்கல் செய்ய முடிவாகி உள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே இந்த மசோதாவை தாக்கல் செய்து, நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதனுடன், இந்த மசோதாவின் மூலம் முக்கிய சீர்திருத்தங்களையும் கொண்டு வர அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால், எளிதில் வர்த்தகம் செய்வது மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும். சில நடைமுறைகளும், விதிகளும் எளிமைப்படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.