ஒடிசா: அரசு ஐ.டி.ஐ.யில் இறைவணக்க நிகழ்வில் மயங்கி, சரிந்து, உயிரிழந்த மாணவர்
ஒடிசாவில் அரசு ஐ.டி.ஐ. ஒன்றில் இறைவணக்க நிகழ்வில் கலந்து கொண்ட முதலாம் ஆண்டு மாணவர் திடீரென மயங்கி, சரிந்து, உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.;
தென்கானல்,
ஒடிசாவின் தென்கானல் நகரில் போரபாதா அரசு ஐ.டி.ஐ. மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காலை இறைவணக்க நிகழ்ச்சி நடந்து உள்ளது. இதில், மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் பங்கேற்றனர்.
இந்த நிலையில், திடீரென மாணவர் ஒருவர் இறைவணக்க நிகழ்வின்போது, மயங்கி, சரிந்துள்ளார். உடனடியாக பிற மாணவர்கள் அவரை தூக்கி கொண்டு தென்கானல் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறி உள்ளனர். அந்த மாணவர் ஜிரால் சாரதெய்ப்பூர் பகுதியை சேர்ந்த அபிஜித் தாஸ் (வயது 17) என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி அந்த மையத்தின் பயற்சி விரிவுரையாளரான தானேஷ்வர் பெஹரா கூறும்போது, விடுதியில் தங்கி படித்து வரும் அபிஜித், காலை இறைவணக்க கூட்டத்திற்கு வந்துள்ளார்.
5 முதல் 10 நிமிடங்கள் நின்றிருந்த அந்த மாணவர், தரையில் சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக நாங்கள், அவரை எங்களது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். ஆனால், அந்த மாணவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறி விட்டனர் என தெரிவித்து உள்ளனர்.
அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் பற்றி தெரிய வரவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அதுபற்றி தெரிய வரும் என கூறப்படுகிறது.