காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் நலனை அரசு காக்கிறது

இந்தியா கூட்டணியில் தி.மு.க. உள்ளதால் தமிழகத்தின் நலனை இங்குள்ள கர்நாடக காங்கிரஸ் அரசு காக்கிறது என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2023-08-17 21:27 GMT

பெங்களூரு:-

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசியல் நோக்கம்

காவிரி படுகையில் உள்ள அணைகளின் சாவி மத்திய அரசிடம் உள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சொல்கிறார். அணைகள் நமது மாநிலத்தில் உள்ளது. நமக்கு அதில் உரிமை உள்ளது. நமது உரிமையை கர்நாடக அரசு விட்டுக்கொடுக்கிறது. இதுபற்றி அவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை. நமது உரிமையை மத்திய அரசுக்கு கொடுத்துவிட்டு, தாங்கள் செய்த தவறுக்காக விவசாயிகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லுமாறு டி.கே.சிவக்குமார் கூறுகிறார்.

விவசாயிகள் கோர்ட்டுக்கு செல்ல வேண்டுமெனில் உங்களை எதற்காக தேர்ந்தெடுத்தனர்?. நீங்கள் பாதுகாப்பு கொடுப்பீர்கள் என்ற எண்ணத்தில் தான் காங்கிரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். உங்களால் விவசாயிகளை காக்க முடியாவிட்டால், நீங்கள் எதற்காக பதவியில் இருக்க வேண்டும். நான் கூறும் கருத்துகளில் அரசியல் நோக்கம் உள்ளதா?.

அரசு புறக்கணிக்கிறது

எதிர்க்கட்சி உறுப்பினராக மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் விவசாயிகள் எவ்வளவு பரப்பில் பயிரிட வேண்டும் என்று சொல்லப்படடுள்ளது. குறுவை சாகுபடிக்கு தமிழக விவசாயிகள் 32 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) 1.80 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிரிட வேண்டும் என்று ஆனால் 60 டி.எம்.சி. நீரை பயன்படுத்தி 4 லட்சம் எக்டேரில் பயிரிட்டுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடகம் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால் இதை காங்கிரஸ் செய்யவில்லை. நமது விவசாயிகளுக்கு நீர் திறந்துவிடவில்லை. தமிழகம் தற்போது நீர் திறக்குமாறு கேட்கிறது. இதனால் கர்நாடக விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. 10 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு கொடுப்பதாக டி.கே.சிவக்குமார் சொல்கிறார். இதன் மூலம் விவசாயிகளின் நலனை இந்த அரசு புறக்கணிக்கிறது.

விவசாயிகளுக்கு துரோகம்

இந்தியா கூட்டணில் தி.மு.க. உள்ளது. அதனால் அந்த மாநிலத்தின் நலனை இங்குள்ள கர்நாடக காங்கிரஸ் அரசு காக்கிறது. இதன் மூலம் கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலர் காங்கிரசுக்கு செல்வதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. தமது அரசு மீதான கமிஷன் புகாரில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இவ்வாறு செய்திகளை பரப்புகிறார்கள்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்