அரியவகை ஆந்தையை விற்க முயன்ற 3 பேர் கைது

அரியவகை ஆந்தையை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-20 21:55 GMT

அரியவகை ஆந்தை

குடகு:

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பகுதியில் காரில் அரிய வகை ஆந்தையை விற்பனைக்காக கடத்தில் செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறையினர் விராஜ்பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தி வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது காரில் ஒரு பிளாஸ்டிக் பெட்டி இருந்தது. அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது வெள்ளை நிற ஆந்தை இருந்தது. இதுதொடர்பாக காருக்குள் இருந்த 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர்கள் கேரள மாநிலம் காசர்கோடு மஞ்சேஸ்வர் பகுதியை சேர்ந்த முகமது, அப்துல் சந்தர் மற்றும் தட்சிண கன்னடா மாவட்டம் தெரலகட்டேயை சேர்ந்த ஷேகாப் என்பதும், இவர்கள் கேரளாவில் பிடித்த வெள்ளை நிற ஆந்தையை கடத்தி வந்து குடகில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பிளாஸ்டிக் பெட்டியுடன் வெள்ளை நிற ஆந்தை மீட்கப்பட்டது. இது அரிய வகை ஆந்தை என்பது குறிப்பிடத்தக்கது. கைதான 3 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்