மத்திய பிரதேசம்: ராணுவ பீரங்கி பேரல் வெடித்து 2 வீரர்கள் பலி
மத்திய பிரதேசம், பாபினா பகுதியில் டி-90 ராணுவ பீரங்கியின் பேரல் வெடித்ததில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.;
Image Courtesy: PTI
பாபினா,
மத்திய பிரதேசம், பாபினா பகுதியில் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டி-90 ராணுவ பீரங்கியின் பேரல் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.
விபத்துக்குள்ளான பீரங்கியில் 3 ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். இதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து, காயமடைந்த வீரரை மீட்டு பாபினா ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பீரங்கியின் பேரல் வெடித்து பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்திய ராணுவம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது எனவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.