லஞ்சப்பணத்துடன் மனைவி எடுத்துக்கொண்ட 'செல்பி: இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம்

கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்ட ரூ.14 லட்சம் லஞ்சப்பணத்துடன் மனைவி மற்றும் குழந்தைகள் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-06-30 23:15 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ரமேஷ் சந்திர சகானி.

இவரது மனைவியும், 2 குழந்தைகளும் கட்டுக்கட்டாக பரப்பி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் கட்டுகளுடன் செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்திருந்தனர்.

அதில் மொத்தம் ரூ.14 லட்சம் இருந்தது. இது ரமேஷ் சந்திர சகானி லஞ்சமாக பெற்ற பணம் என கூறப்படுகிறது.

இந்த புகைப்படத்தை சகானியின் மனைவி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார். இது வைரலாக பரவி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைப்பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள், உடனடியாக ரமேஷ் சந்திர சகானியை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

அத்துடன் இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது மாநில போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த புகைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 14-ந்தேதி எடுக்கப்பட்டது எனவும், அப்போது தங்கள் குடும்ப சொத்து ஒன்றை விற்றதில் கிடைத்த பணம் இது எனவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சந்திர சகானி தெரிவித்து உள்ளார்.

எனினும் இது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்