மது விற்பனையில் ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட உத்தர பிரதேச அரசு இலக்கு
அரசின் திட்டங்களுக்கு அதிக வருவாயை ஈட்டுதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக கலால் வரி உயர்த்தப்படுவதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.;
லக்னோ,
2023-24ம் நிதியாண்டில் மது விற்பனையில் 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு உத்தர பிரதேச அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகைக் காலங்களில் மது விற்பனைக்கான நேரத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் உத்தர பிரதேசத்தில் வெளிநாட்டு மதுபானங்கள், பீர் மற்றும் பாங்க் பானங்களை விற்கும் கடைகளுக்கான உரிம கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பிற கட்டணங்களும் உயர்வதால், அங்கு ஏப்ரல் முதல் மதுபானங்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் திட்டங்களுக்கு அதிக வருவாயை ஈட்டுதல், மதுபான வர்த்தகத்திற்கு உறுதித் தன்மையை வழங்குதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக கலால் வரி உயர்த்தப்படுவதாக உத்தர பிரதேச அரசின் புதிய கலால் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.