கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின் போது தாசரஹள்ளி தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 0173 ஆண்களும், 2 லட்சத்து 8 ஆயிரத்து 728 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 76 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 47 ஆயிரத்து 821 பேர் வாக்களிக்க தகுதி படைத்துள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து இங்கு மொத்தம் 8 சட்டசபை தேர்தல் நடைபெற்று உள்ளது. இதில் 2 முறை பா.ஜனதாவும், ஒரு முறை ஜனதாதளம்(எஸ்) கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.
இந்த தொகுதியில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த முனிராஜூ, கடந்த 2008 மற்றும் 2013-ம் ஆண்டு போட்டியிட்டு ெவற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். கடந்த சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்.மஞ்சுநாத் ெவற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. முனிராஜூ மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள ஆர்.மஞ்சுநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் தனஞ்ஜெயா கங்காதரய்யா என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக ஒக்கலிகர் மற்றும் ஆதிதிராவிட மக்கள் உள்ளனர். வாக்காளர்களின் வசதிக்காக தாசரஹள்ளி தொகுதியில் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் இங்கு தங்கி பணிப்புரிந்து வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத்தக்க பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இந்த தொகுதியில், பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட ஷெட்டிஹள்ளி, மல்லச்சந்திரா, பாகலகுண்டே, தாசரஹள்ளி, சொக்கசந்திரா, பீனியா தொழிற்பேட்டை, ராஜகோபாலநகர், உள்பட 8 வார்டுகள் உள்ளன. இதில் 5 வார்டுகளில் பா.ஜனதா பலமாக உள்ளது.
இங்கு தொடர்ந்து 2 முறை முனிராஜூ வெற்றிபெற்றும், மெஜாரிட்டி வார்டுகளை பா.ஜனதா கட்சி தனது வசத்தில் வைத்திருந்தாலும் போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என மக்கள் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக சாலை பராமரிப்பு, ஏரிகள் தூர்வாருதல், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற புகாரும் உள்ளது. இதேபோல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், போதுமான தெருவிளக்குகள் அமைக்கவும் கூட கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என இங்குள்ள மக்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இது அவருக்கு பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. இதனால் கடந்த முறை ஜனதாதளம்(எஸ்) வேட்பாளரிடம் வெற்றியை பறிகொடுத்த முனிராஜூ இந்த முறை வெற்றி பெற தீவிர களப்பணியாற்றி வருகிறார். தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள ஆர்.மஞ்சுநாத்தும் வளர்ச்சி பணிகள் சரிவர செய்யவில்லை என மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது அவருக்கு பாதகமாக அமையலாம். காங்கிரஸ் வேட்பாளர் இந்த முறை சவால் அளிப்பாரா?, வாக்காளர்களின் இந்த அதிருப்தியை சரிசெய்து தாசரஹள்ளி தொகுதியில் முனிராஜூ மீண்டும் வெற்றி கனியை ருசிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்
கடந்த 2008-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள்
ஆண்டு வெற்றி தோல்வி
2008 முனிராஜூ(பா.ஜனதா)-59,004 அசோக்(காங்.)-36,849
2013 முனிராஜூ(பா.ஜனதா)-57,562 சங்கர்(காங்.)-36,979
2018 ஆர்.மஞ்சுநாத்(ஜ.தளம்-எஸ்)-94,044 முனிராஜூ (பா.ஜனதா)-83,369