ஏமன்: ராணுவ தளத்தின் ஆயுத சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து; 6 பேர் பலி

ஏமன் நாட்டின் ராணுவ தளத்தில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-07-05 23:19 GMT

சனா,

ஏமன் நாட்டில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நீடித்து வருகிறது. நாட்டின் அதிபராக செயல்பட்டு வந்த மன்சூர் ஹாதிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தொடங்கினர்.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது.

இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மன்சூர் தனது அதிபர் அதிகாரம் அனைத்தும் ரஷித் அல் அலிமினி தலைமையிலான அதிபர் தலைமை கவுன்சிலுக்கும் மாற்றப்பட்டது.

ஆனாலும், ஏமன் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நீடித்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் அப்யன் மாகாணம் லவ்டர் நகரில் அரசுப்படைகளுக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கு உள்ளது. அந்த ஆயுதக்கிடங்கில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் அரசு ஆதரவு படையினர் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், மேலும், இந்த வெடிவிபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது திட்டமிட்ட தாக்குதலா? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்