பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.10.20 லட்சம் இழப்பீடு

Update: 2023-05-28 19:00 GMT

தானே, 

தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்தவர் மகேந்திரா. இவரது மனைவி ஜோதி. கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜோதிக்கு கடும் காய்ச்சல், சளி தொந்திரவு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மகேந்திரா அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மனைவியை சேர்த்தார். அங்கு டாக்டர் சதீஷ் போயர் ஜோதிக்கு சிகிச்சை அளித்தார். ஜோதிக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் 2 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. அப்போது ஜோதியின் வாய், மூக்கு வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டு உடல்நலம் மோசமடைந்தது.

டாக்டர் சதீஷ் போயர் அங்கு வந்து பரிசோதனை செய்தபோது ஜோதி உயிரிழந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ரத்தத்தை முறையாக பரிசோதனை செய்யாமல் தவறான ரத்தவகையை செலுத்தியதால் ஜோதி உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அவரது கணவர் மகேந்திரா மனைவி உயிரிழப்பிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தருமாறு ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் முறையிட்டார். இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்ததால் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய நுகர்வோர் கோர்ட்டில் முறையிட்டார்.

இந்த வழக்கில் முறையான அனுமதியின்றி ஆஸ்பத்திரி நடத்தி வந்ததும், ஹோமியோபதி மருத்துவம் பயின்ற மருத்துவ அதிகாரி தலைமையில் ரத்த பரிசோதனை செய்யாமல் ரத்தத்தை செலுத்தியதால் ஜோதி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனால் உயிரிழந்த ஜோதியின் குடும்பத்திற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் டாக்டர் சதீஷ் போயர் இணைந்து ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். 2 மாதத்தில் இந்த தொகையை வழங்காவிட்டால் 12 சதவீத வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக வழங்கவும் தேசிய நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்