சமூக வலைதளத்தில் பாகிஸ்தான் சுதந்திர தின வீடியோ பதிவிட்ட 2 மாணவர்கள் கைது

சமூக வலைதளத்தில் பாகிஸ்தானின் சுதந்திர தின கொண்டாட்ட வீடியோ பதிவிட்ட 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-16 19:30 GMT

மும்பை, 

சமூக வலைதளத்தில் பாகிஸ்தானின் சுதந்திர தின கொண்டாட்ட வீடியோ பதிவிட்ட 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் கொடி

மும்பை கொலபா பகுதியை சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஸ்டேட்டசில் பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டம் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தனர். இதைபார்த்த கொலாபா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அந்த மாணவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், "பாகிஸ்தான் கொடி அடங்கிய சுதந்திர தின கொண்டாட்டத்தை அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டதன் மூலம் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்" என தெரிவித்து இருந்தார்.

கைது

இந்த புகாரின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சம்பவத்தன்று இரவு மாணவர்களை விசாரணைக்காக கொலாபா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் மாணவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதும், அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வந்த வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஸ்டேட்டஸ் வைத்ததும் தெரியவந்தது. அந்த வீடியோவை போலீசார் அவர்களின் போனில் இருந்து அகற்றினர். மாணவர்களை இரவு முழுவதும் காவலில் வைத்து காலையில் எச்சரித்து விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்