'வந்தே பாரத்' ரெயிலில் 96 சதவீத இருக்கைகள் நிரம்பின

மும்பை - காந்திநகர் இடையே இயக்கப்பட்ட ‘வந்தே பாரத்' ரெயிலில் 96 சதவீத இருக்கைகள் நிரம்பியதாக மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

Update: 2022-10-01 18:45 GMT

மும்பை, 

மும்பை - காந்திநகர் இடையே இயக்கப்பட்ட 'வந்தே பாரத்' ரெயிலில் 96 சதவீத இருக்கைகள் நிரம்பியதாக மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

'வந்தே பாரத்' ரெயில்

மும்பை - காந்திநகர் இடையே 'வந்தே பாரத்' ரெயில் சேவையை நேற்று முன்தினம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அவர் காந்திநகரில் இருந்து ஆமதாபாத்தில் உள்ள கலுபுர் ரெயில் நிலையம் வரை அந்த ரெயிலில் பயணம் செய்தார். நாட்டின் அதிவேக ரெயிலான 'வந்தே பாரத்' முற்றிலும் குளு, குளு ஏ.சி. வசதி கொண்டது. இந்த ரெயிலில் 'கவச்' தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளும் இடம்பெற்று உள்ளன.

இதில் வந்தே பாரத் ரெயில்களுக்கான முன்பதிவு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. முதல் வந்தே பாரத் ரெயில் நேற்று மும்பை - காந்திநகர் இடையே இயக்கப்பட்டது.

96 சதவீதம் நிரம்பியது

இந்த ரெயிலுக்கான 96 சதவீத டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்குர் கூறுகையில், " வந்தே பாரத்தில் மொத்தம் உள்ள 1,123 டிக்கெட்டுகளில் 1,086 டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. இந்த டிக்கெட்டுகள் மும்பையில் இருந்து காந்திநகர் செல்ல முன்பதிவு செய்யப்பட்டது. அதாவது மொத்த இருக்கைகளில் 96.70 சதவீதம் நிரம்பிவிட்டது " என்றார்.

மும்பை - காந்திநகர் வந்தே பாரத் ரெயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படும். இதில் பயணம் செய்ய சாதாரண இருக்கைக்கு (சேர் கார்) ரூ.1,440, உயர்ரக இருக்கைக்கு ரூ.2 ஆயிரத்து 650 கட்டணமாகும். இதேபோல காந்திநகரில் இருந்து மும்பை வர முறையே ரூ.1,275, ரூ.2 ஆயிரத்து 455 கட்டணமாகும்.

மேலும் செய்திகள்