கொரோனா கால செலவினங்களுக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை- சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்

மும்பை மாநகராட்சி கொரோனா காலத்தில் மேற்கொண்ட செலவுகளுக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Update: 2023-03-25 18:45 GMT

மும்பை,

மும்பை மாநகராட்சி கொரோனா காலத்தில் மேற்கொண்ட செலவுகளுக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆவணங்களை தரவில்லை

சட்டசபையில் நேற்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பை மாநகராட்சி தொடர்பான தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2019-ம் ஆண்டு நவம்பர் முதல் 2022 அக்டோபர் மாதம் வரை மும்பை மாநகராட்சியின் 9 துறைகளில் 12 ஆயிரத்து 23 கோடி செலவிடப்பட்டுள்ளது. பல பணிகள் டெண்டர் விடப்படாமல் அல்லது முறையாக ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யாமல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகளுக்கான ஆவணங்கள் வழங்கப்படவில்லை. மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்த போதும் அவர்கள் அதுதொடர்பான ஆவணங்களை தரவில்லை.

வெளிப்படைத்தன்மை இல்லை

மும்பை மாநகராட்சி கொரோனா கால சட்டத்தை சுட்டிக்காட்டி ரூ.3 ஆயிரத்து 538.73 கோடி செலவு குறித்து விசாரணை நடத்தவும் அனுமதிக்கவில்லை. மும்பை மாநகராட்சி பணிகளில் வெளிப்படை தன்மை, நேர்மை தன்மை இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து மாநில அரசு லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ. அமித் சாட்டம் வலியுறுத்தினார்.

"இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு தணிக்கை அறிக்கை சட்டசபை பொது கணக்கு கமிட்டியிடம் தாக்கல் செய்யப்படும். ஊழல் எதுவும் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்