மும்பை மாநகராட்சி மேயர் பதவியை பட்னாவிஸ் சிவசேனாவுக்கு விட்டு கொடுத்தார் - ஏக்நாத் ஷிண்டே பேச்சு

2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சி மேயர் பதவியை பட்னாவிஸ் சிவசேனாவுக்கு விட்டு கொடுத்தார் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

Update: 2023-07-16 18:45 GMT

மும்பை, 

2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சி மேயர் பதவியை பட்னாவிஸ் சிவசேனாவுக்கு விட்டு கொடுத்தார் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மும்பை மாநகராட்சி தேர்தல்

நவிமும்பையில் நடந்த சிவசேனா கட்சி கூட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

2017-ம் ஆண்டு மும்பை மாநகராட்சி தோ்தலில் பா.ஜனதா ஏறக்குறைய வெற்றி பெற்றது. அந்த நேரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருந்தார். அப்போது எங்கள் தலைவர் (உத்தவ் தாக்கரே), மாநகராட்சி நமது வசம் உள்ளது, அது நமது கையைவிட்டு சென்றுவிடக்கூடாது என்றார். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் பா.ஜனதாவை சேர்ந்தவரை மேயராக்க வேண்டும் என முடிவு செய்து இருந்தார். எனவே நான் தேவேந்திர பட்னாவிசிடம் கூறினேன், 'நாம் மாநில அரசில் உள்ளோம். சேர்ந்து வேலை செய்கிறோம். ஆனால் எங்கள் தலைவரின் மனது மும்பையில் தான் உள்ளது. எனவே நீங்கள் மும்பையை விட்டுவிடுங்கள் என்றேன்'.

சிவசேனாவுக்கு விட்டுகொடுத்தார்

தேவேந்திர பட்னாவிசும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். மும்பை மேயர் பதவியை சிவசேனாவுக்காக விட்டு கொடுத்தார். ஆனால் நீங்கள் அவருக்கு திருப்பி கொடுத்தது என்ன?. கடந்த 7 ஆண்டுகளில் தேவேந்திர பட்னாவிஸ் மும்பை மாநகராட்சியை கைப்பற்றி, பா.ஜனதா மேயரை அமர வைத்திருப்பேன் என ஒருமுறை கூட கூறியதில்லை. அவர் அதை சிவசேனாவுக்கு கொடுத்தார். இவ்வாறு அவர் பேசினார். 2017-ம் ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் சிவசேனா 82 இடங்களிலும், பா.ஜனதா 80 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்