ராகுல்காந்தியை அவமதித்த விவகாரத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ராகுல்காந்தியை அவமதித்த விவகாரத்தில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சம்பந்தப்பட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை இடைநீக்க செய்ய அவர்கள் வலியுறுத்தினர்.

Update: 2023-03-25 18:45 GMT

மும்பை,

ராகுல்காந்தியை அவமதித்த விவகாரத்தில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். சம்பந்தப்பட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை இடைநீக்க செய்ய அவர்கள் வலியுறுத்தினர்.

அவமதிப்பு

பிரதமர் மோடி பற்றி அவதூறு பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை தொடர்ந்து மராட்டிய சட்டசபை வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை கூடிய பா.ஜனதா மற்றும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ராகுல்காந்திக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

அப்போது சிலர் ராகுல்காந்தி பதாகை மீது செருப்பால் தாக்கினர். ராகுல்காந்தி வீரசாவர்க்கரை அவமதித்ததாக கூறி, இந்த செயலில் ஈடுபட்டனர்.

வெளிநடப்பு

இந்த நிலையில் ராகுல்காந்தியை அவமதித்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் யோகேஷ் சாகர், ராம் சத்புதே மற்றும் சிவசேனா எம்.எல்.ஏ. பாரத் கோக்வாலே ஆகியோரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நேற்று 2-வது நாளாக சட்டசபையில் மகா விகாஸ் அகாடி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

போராட்டம்

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் சபாநாயகர் ராகுல் நர்வேக்கரை அவரது அறையில் சந்தித்து சம்பந்தப்பட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்யாவிட்டால் சபையை புறக்கணிப்போம் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து மகா விகாஸ் அகாடி எம்.எல்.ஏ.க்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். 

மேலும் செய்திகள்