சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16 கோடி பூச்சிகொல்லி மருந்துகள் பறிமுதல்

சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16 கோடி பூச்சிகொல்லி மருந்துகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

Update: 2023-01-25 18:45 GMT

மும்பை, 

சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16 கோடி பூச்சிகொல்லி மருந்துகளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

ரகசிய தகவல்

சீனா நாட்டை சேர்ந்த வினியோகஸ்தர்கள் மூலம் பூச்சிகொல்லி மருந்துகள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கடந்த ஒரு மாதத்தில் சோதனை நடத்தி கடத்தப்பட்ட பூச்சிகொல்லி மருந்துகளை அதிகளவில் பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பூச்சிகொல்லி மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய அரசின் வாரியத்தின் அனுமதி தேவைப்படுகிறது. ஆனால் இறக்குமதியாளர் மற்றும் அதன் உற்பத்தியாளர்கள் வாரியத்திடம் அனுமதி பெறாமல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். சீன நாட்டு ஏஜென்சியுடன் கும்பல் ஒன்று இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.

ரூ.16 கோடி பறிமுதல்

இதன்பேரில் நடத்திய விசாரணையில், சீனாவை சேர்ந்த ஏஜென்சிகள் போலி பெயரை ஆவணங்களில் குறிப்பிட்டு உள்ளனர். பின்னர் பூச்சி கொல்லி மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து ஹவாலா நெட்வொர்க் மூலம் அனுப்பி வந்தது தெரியவந்தது. இதைத்தவிர 300 மெட்ரிக் டன்னை விட அதிகமான பூச்சி கொல்லி மருந்துகள் கடத்தி ரூ.300 கோடிக்கும் மேல் வருமானம் பார்த்து வந்து உள்ளனர். இதனால் ரூ.16 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள 30 மெட்ரிக் டன் எடையுள்ள பூச்சி கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்