பேய் விரட்டுவதாக கூறி முதியவரிடம் பணம் பறித்த வேலைக்கார பெண் கைது- மந்திரவாதிக்கு வலைவீச்சு

பேய் விரட்டுவதாக கூறி முதியவரிடம் பணம் பறித்த வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மந்திரவாதியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-09-18 14:54 GMT

தானே,

பேய் விரட்டுவதாக கூறி முதியவரிடம் பணம் பறித்த வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மந்திரவாதியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வீட்டில் சிறப்பு பூஜை

டோம்பிவிலி கோனி பகுதியை சேர்ந்தவர் வசந்த் கங்காராம் (வயது79). இவரது மனைவி கடந்த சில ஆண்டுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் அவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் பிரியா(26) என்ற பெண் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த ஜூலை மாதம் வீட்டில் பேய் இருப்பதாகவும், இதன் காரணமாக தான் வசந்த் கங்காராமின் மனைவி உயிரிழந்ததாக பிரியா தெரிவித்தாள். தனக்கு தெரிந்த மந்திரவாதி இருப்பதாகவும், வீட்டில் சிறப்பு பூஜை செய்தால் பேய் ஓடிவிடும் என வசந்த் கங்காராமிடம் தெரிவித்தார்.

இதனை நம்பிய வசந்த் கங்காராம் மந்திரவாதியை அழைத்து வரும்படி வேலைக்கார பெண்ணிடம் தெரிவித்தார்.

வேலைக்கார பெண் கைது

இதன்படி பிரியா மந்திரவாதி செக்னா சேக் என்பவரை அழைத்து வந்தார். பின்னர் வீட்டில் சில பூஜைகளை நடத்தி ஜூலை மாதம் முதல் 3 மாதம் வரையில் பல சந்தர்ப்பங்களில் நகை, பணத்தை பறித்து உள்ளனர். மேலும் தொடர்ந்து பணம் கேட்டு நச்சரித்து வந்ததால் தன்னை 2 பேரும் சேர்ந்து ஏமாற்றி வருவதாக வசந்த் கங்காராம் உணர்ந்தார். இதன்பேரில் மான்பாடா போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் பற்றி அறிந்த மந்திரவாதி தலைமறைவாகி விட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டு வேலைக்கார பெண் பிரியாவை கைது செய்தனர்.

மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ.15 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்