அரசு மக்களின் துயரத்தை தீர்க்க தவறிவிட்டது - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

அரசு மக்களின் துயரத்தை தீர்க்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளது.

Update: 2023-07-16 20:00 GMT

மும்பை, 

அரசு மக்களின் துயரத்தை தீர்க்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்

சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஆளும் கட்சிகள் நடத்திய தேநீர் விருந்து நிகழ்ச்சியில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. இந்தநிலையில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பாலாசாகேப் தோரட், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல், சிவசேனா மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே ஆகியோர் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு அம்பாதாஸ் தன்வே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தவறான குற்றச்சாட்டு

அரசு பல முனைகளில் மக்களின் துயரத்தை தீர்க்க தவறிவிட்டது எனவே மாநில அரசின் தேநீர் விருந்து அழைப்பை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அரசியலமைப்பு விதிமுறைகளின்படி இந்த அரசு செல்லுபடியாகும் தன்மை ஏற்கனவே கேள்விக்குறியாகி உள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், அவர்களை சேருமாறு கட்டாயப்படுத்துவதற்கும் அல்லது அவர்கள் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்துவதற்கும் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் கொள்கையை அரசு பயன்படுத்துகிறது. பல அரசியல் அமைப்பு விதிமுறைகள் புறக்கணிக்கப்படுவதால், மராட்டிய ஜனநாயகத்தில் நிலவும் மோசமான போக்கை காண முடிகிறது. முதல்-மந்திரியே தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்கொள்கிறார். மராட்டியத்திற்கு வரவேண்டிய பல திட்டங்கள் வெளி மாநிலத்திற்கு சென்றுவிட்டதால் நாட்டின் தொழில் வளர்ச்சி பின்தங்கி உள்ளது. மறுபுறம், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சுத்திகரிப்பு திட்டம் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

45 எம்.எல்.ஏ.க்கள்

அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதை அடுத்து காலியாக உள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் உரிமை கோருமா என்று நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாலாசாகேப் தோரட், "காங்கிரஸ் கட்சியில் 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே நாங்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோரலாம். எனினும் பதவிக்கான வேட்பாளரை டெல்லியில் உள்ள மூத்த தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள். இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர் பதவியானது சட்டசபை சபாநாயகர் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வமாகிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்