ரூ. 5 ஆயிரம் கள்ளநோட்டு, ரூ. 50 ஆயிரம் கள்ளநோட்டு ஆனது!

இலங்கையில் ரூ. 5 ஆயிரம் கள்ளநோட்டு அச்சடிக்க முயன்றவர்கள், தவறுதலாக ரூ. 50 ஆயிரம் கள்ளநோட்டு அடித்து மாட்டிக் கொண்டனர்.

Update: 2018-10-27 12:22 GMT
இலங்கையில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு 5 ஆயிரம் ரூபாய் நோட்டு ஆகும்.

அந்த 5 ஆயிரம் ரூபாய் நோட்டு போன்ற தோற்றத்தில் 50 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது என்றும், விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், எனவே கூடுதல் தகவல்களை வழங்க முடியாது என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த 50 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை குருநாகல் பிரதேசத்தில் போலீசார் சமீபத்தில் கைப்பற்றியிருந்தனர். இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரும், பிரபல தனிப்பயிற்சி ஆசிரியர் ஒருவரும் இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இலங்கையில் கள்ள ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் பரவலாக புழக்கத்தில் உள்ளன. இதைத் தடுப்பதற்கு அந்நாட்டு மத்திய வங்கியும், குற்றப் புலனாய்வுத் துறையும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.

மத்திய வங்கி, ரூபாய் நோட்டுகளை அச்சிடும்போது பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறது.

ஆனாலும், மோசடியாளர்கள் அசல் ரூபாய் நோட்டுகளைப் போன்ற கள்ள நோட்டுகளை அச்சிட்டு மக்கள் மத்தியில் புழக்கத்தில் விடுவதும், அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வதும் தொடர்ந்து நடந்துவருகின்றன.

பொதுவாக, இதுபோன்ற மோசடியாளர்கள் அச்சிடும் கள்ளநோட்டுகளை அதிக கவனம் செலுத்தினால் அன்றி, சாதாரணமாக அறிய முடியாது.

ஆனால், 5 ஆயிரம் ரூபாய் நோட்டில் ஒரு பூஜ்ஜியத்தை அதிகமாக சேர்த்ததால் அது எளிதில் பிடிபட்டுவிட்டது.

தப்பை, தப்பாகச் செய்துவிட்டார்கள்!

மேலும் செய்திகள்