தமிழகத்தில் அதிக வாக்குகள் பதிவான தொகுதிகள்: கோவைக்கு 3-வது இடம்

2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையில் முதல் 5 இடங்களில் எந்தெந்த தொகுதிகள் இடம் பெற்றுள்ளன என்ற விவரத்தை இங்கே அறிந்து கொள்ளலாம்.

Update: 2024-04-22 07:20 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந்தேதி காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 69.72 சதவீதம் பதிவானதாக இறுதியாக தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பதிவான தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 14 லட்சத்து 35 ஆயிரத்து 243 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 30 ஆயிரத்து 030 ஆகும். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 05 ஆயிரத்து 159 வாக்குகள் ஆகும்.  வாக்கு சதவிகிதம் 60.25 சதவிகிதமாக உள்ளது. 

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தி.மு.க.வில் டி.ஆர்.பாலுவும், அ.தி.மு.க.வில் பிரேம் குமாரும் போட்டியிட்டுள்ளனர். பா.ஜனதா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியில் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வி.என்.வேணுகோபால் களத்தில் உள்ளார். 

இரண்டாவது இடத்தில்..

அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் திருவள்ளூர் உள்ளது.  இந்த தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 30 ஆயிரத்து 738 வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு சதவிகிதம் 68.59 சதவிகிதமாகும். திருவள்ளூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 23 ஆயிரத்து 795 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 06 ஆயிரத்து 852 பேரும் வாக்களித்துள்ளனர். திருநங்கையர்கள் 91 பேர் வாக்களித்துள்ளனர்.  

திருவள்ளூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதாவும் போட்டியிட்டன. காங்கிரஸ் வேட்பாளராக சசிகாந்த் செந்தில், தேமுதிகவில் நல்ல தம்பி, பாஜகவில் பாலகணபதி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

கோவை

இந்த பட்டியலில் 3-வது இடத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதி வருகிறது. கோவை தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 83 ஆயிரத்து 034 -ஆக உள்ளது. இதில், தேர்தலில் பதிவான வாக்குகள் 13 லட்சத்து 66 ஆயிரத்து 597. இதன்படி பார்த்தால் வாக்கு சதவிகிதம் 64.89 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 79 ஆயிரத்து 360 பேரும், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 87 ஆயிரத்து 108 பேரும் வாக்களித்துள்ளனர். திருநங்கையர் வாக்குகள் 129 விழுந்துள்ளன. கோவையில், ஆண்களை விட பெண்களே அதிக அளவு தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்கள். 

இந்த தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாக கோவை நாடாளுமன்ற தொகுதி இருந்தது.ஏனெனில்   தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இங்கு  போட்டியிட்டதால்  கோவை தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது. அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு இருந்தன. இந்த தொகுதியில் தி.மு.க.- அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே நேரடி போட்டி நிலவியது. தி.மு.கவில் கணபதி ராஜ்குமாரும், அ.தி.மு.க.வில் சிங்கை ராமச்சந்திரனும் போட்டியிட்டனர்.

கடந்த தேர்தல்களில் எப்படி?

கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 12 லட்சத்து 45 ஆயிரத்து 644 வாக்குகள் பதிவாகியிருந்தன. அப்போது, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 58 ஆயிரத்து 905 ஆகும். வாக்கு சதவிகிதம் அந்த தேர்தலில் 63.86 ஆக இருந்தது.

அதேபோல், 2014 நாடாளுமன்ற தேர்தலில் 11 லட்சத்து 59 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவாகியிருந்தன. மொத்த வாக்குகள் எண்ணிக்கை 17 லட்சத்து 20 ஆயிரத்து 221 ஆகும். 2014 தேர்தலில் 68.40 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அந்த வகையில், 2019 ஆம் ஆண்டு தேர்தலை விட 2024 தேர்தலில் 1.03 சதவிகித வாக்குகள் கூடுதலாகவே பதிவாகியுள்ளது.

4 மற்றும் 5-ம் இடம்

2024 -நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பதிவான தொகுதிகளின் பட்டியலில் காஞ்சிபுரம் 4-ம் இடம் வகிக்கிறது. காஞ்சிபுரத்தில் 12 லட்சத்து 53 ஆயிரத்து 582 வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு சதவிகிதம் 71.68 சதவிகிதமாக உள்ளது. 

இந்த பட்டியலில் 5-வது இடத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி இடம் பெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 12 லட்சத்து 42 ஆயிரத்து 597 வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு சதவிகிதம் 79.21 சதவிகிதமாக உள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வாக்கு சதவிகிதம் -முதல் 5 இடங்களில் உள்ள தொகுதிகள்

தர்மபுரி: 81.20 சதவிகிதம்

கள்ளக்குறிச்சி: 79.21  சதவிகிதம்

கரூர்; 78.70 சதவிகிதம்

நாமக்கல்: 78.21 சதவிகிதம்

சேலம்: 78.16 சதவிகிதம்

Tags:    

மேலும் செய்திகள்