குயிலி கற்பனையா? வரலாறா?

சிவகங்கை அரசி வேலு நாச்சியாரின் தோழியாக அறியப்படுபவர் குயிலி. 18 வயது பெண்.

Update: 2018-11-05 03:00 GMT
 1780-ம் ஆண்டு ஆற்காடு நவாப், புதுக்கோட்டை தொண்டைமான், ஆங்கிலேயரது படைகள் ஒரு புறமாகவும், வேலு நாச்சியார், மருது பாண்டியரது படைகள் ஒரு புறமாகவும் நின்று சிவகங்கையை மீட்டெடுக்க நடத்திய போரில் உடல் முழுக்க எரி நெய்யை பூசிக்கொண்டு, தனக்குத் தீயிட்டபடி, அரண்மனைக்குள் இருந்த ஆங்கிலேய வெடிமருந்து கிடங்கின் மீது பாய்ந்து கிடங்கை எரித்தவர், முதல் தற்கொலை போராளி என குயிலி தமிழக வரலாற்றில் வேரூன்றியிருக்கிறார்.

சிவகங்கை அரசி வேலு நாச்சியாருக்காக, சூரக்குளத்தில் 2014-ம் ஆண்டு 60 லட்சம் ரூபாயில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்தது. மணி மண்டபத்திற்குள் ரூ.27லட்சத்து 50 ஆயிரம் செலவில் குயிலிக்காக நினைவுச் சின்னம் ஒன்றும் அமைக்கப்பட்டது. “வேலு நாச்சியாரின் படைத் தளபதியாய் விளங்கித் தன் உயிரை மாய்த்துக்கொண்ட, வீரத் தாய் குயிலி” என புகழ்ந்துரைத்து நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த நிலையில் ஒப்பனைகளின் கூத்து சிவகங்கை வரலாற்றை வைத்து ஓர் ஆய்வு என்ற நூலை குருசாமி மயில்வாகனன் எழுதி இருக்கிறார். அதில் குயிலி கதாபாத்திரம் பற்றி அவர் கூறும் தகவல் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது.

தமிழக அரசு ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்து நினைவுச் சின்னம் அமைத்துள்ள குயிலி என்ற வீரப் பெண்மணியின் பாத்திரமே கற்பனையென்கிறார். “சிவகங்கையின் வரலாற்று நூல்கள், கல்வெட்டுகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்துவிட்டேன், குயிலி என்ற பாத்திரம் கடந்த 30 ஆண்டுகளாகத்தான் நம்மிடையே கருவாகி, உருவாகி, வளர்ந்து இன்று நினைவுச் சின்னம் வரை வந்திருக்கிறது” என்கிறார்.

குயிலியைப் பற்றி உணர்ச்சிப்பொங்க முற்போக்கு மேடைகளில் கேட்டுப் பழகியுள்ளவர்களுக்கு குயிலி கற்பனை என்பதை ஏற்கவே முடியாது. சுகமான கனவை கலைத்துக்கொள்ள விரும்பாத குழந்தையைப்போல், அப்படியொரு பாத்திரம் நன்றாகத்தானே இருக்கிறது என்று மனம் விரும்பும். வரலாறும் புனைவும் கதைகளுக்குள் கலந்திருக்கலாம். புதினங்கள் எழுதுகிறவர்களின் கற்பனைக்கு தடையில்லை. புதினத்தில் வரலாறு இருக்கலாம். வரலாற்றுக்குள் புனைவு இருக்கக்கூடாது. சரியான வரலாற்றைச் சொல்லவில்லை யென்றாலும் பரவாயில்லை, வரலாற்றை ஒருபோதும் திரிக்கக்கூடாது, குயிலி திரிபில் வளர்ந்த பாத்திரமாகும் என்று ஆய்வாளர் கூறுகிறார்.

குயிலி எங்கிருந்து பிறந்திருக்கிறார் என கால வரிசையில் பின்னோக்கிச் சென்றிருக்கிறார் குருசாமி. சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்க ஜீவபாரதியின் ‘வேலு நாச்சியார்’ நூலே காரணமாக அமைந்ததாக ஒரு விழாவில் கூறியிருக்கிறாராம். ஜீவபாரதியைத் தொடர்ந்து குயிலி குறித்து ஆலம்பட்டு சோ.உலகநாதன் ‘குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி’ என்றொரு நூல் எழுதியிருக்கிறார். இவர் குயிலியை ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர் என்கிறார். சந்திமாவோ என்பவர், ‘குயிலி ராணி வேலு நாச்சியாரின் பெண்கள் படைத்தளபதி(முதல் தற்கொலைப் போராளி)’ என்றொரு நூல் எழுதியிருக்கிறார். இவர் குயிலியை அருந்ததியர் சாதியைச் சேர்ந்தவர் என்கிறார். இருவரின் நூல்களும் ஆய்வு நூல்கள். ஜீவபாரதியின் நூல் புனைவிலக்கியம். புனைவிலக்கியத்தை ஆதாரமாகக் கொண்டு இவர்கள் ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார்கள். ஜீவபாரதியின் ‘வேலு நாச்சியார்’ நாவலை ஆய்வாளர்கள் தங்களின் இள முனைவர் பட்டத்திற்காக ஆய்வும் செய்துள்ளார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக காளையார்கோவில் மு.சேகர் என்பவர் எழுதிய, ‘வீரம் விளைந்த சிவகங்கைச் சீமையின் செம்மண்’ எனும் நூலே குயிலி பற்றி குறிப்பிடும் முதல் அச்சு நூலாகும். மு.சேகருக்கு முன்பாக முன்னாள் மத்திய இணையமைச்சர் இ.சுதர்சன நாச்சியப்பன். 1985-ம் ஆண்டு வெளியான காங்கிரஸ் நூற்றாண்டு மலரில் “வரலாற்றில் மறைக்கப்பட்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் முதல் சுதந்திரப் போர்” எனும் கட்டுரையில் குயிலியைப் பற்றி எழுதியிருக்கிறார்.

மறவர் பெண்ணாக, அருந்ததி இனப் பெண்ணாக, ஆதிதிராவிட பெண்ணாக, சுதர்சன் நாச்சியப்பன் தொடங்கி ஆலம்பட்டு சோ.உலகநாதன் வரை குயிலியைப் பல தெய்வத் தந்தைகள் உருகொடுத்து வளர்த்திருக்கிறார்கள். இதையெல்லாம்விட உச்சம், 1780-ம் ஆண்டு நடந்த போரில்தான் நாச்சியாரைக் காக்க குயிலி தியாகம் செய்ததாக இவர்கள் எல்லோரும் எழுதியிருக்கிறார்கள். 1780-ம் ஆண்டு காளையார் கோவிலில் போரே நடக்கவில்லை என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை அடுக்குகிறார் குருசாமி. 1780-ம் ஆண்டு போர் ஆங்கிலேய லெப்டினண்ட் கர்னல் ஆப்ரகாம் பாஞ்சோர் தலைமையில் நடந்தது என்கிறார்கள். 1772-ம் ஆண்டு சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரையும் அவர் இளைய ராணி கவுரி நாச்சியாரையும் படுகொலை செய்த சம்பவத்தினால் கிழக்கிந்தியக் கம்பெனியே அதிர்ந்து போய் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்ததோடு அவனைத் திரும்ப அழைத்துக்கொள்ள வலியுறுத்தியது. 1775-ம் ஆண்டு பாஞ்சோர் உடல்நிலை சரியில்லாததால் லண்டனுக்குத் திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டான். 1780-ல் குயிலி உயிர் துறந்ததாகச் சொல்லப்படும் காளையார் கோவில் போரில் பாஞ்சோர் கலந்துகொள்ளவில்லை. வாய்மொழிப் பாடல்களில் குயிலி பற்றிய குறிப்புகள் உள்ளன என சிலர் கூறுகிறார்கள். அப்பாடல்களெல்லாம் சமீபகாலத்தில் இட்டுக்கட்டிப் பாடப்பட்டவை வரலாற்று ஆதாரங்களோடு, நாட்டுப்புறப் பாடல்களை ஒப்பிட்டு உண்மைகளைச் சரிபார்க்க வேண்டும். சிவகங்கையின் வரலாற்று ஆதாரங்களில் குயிலி பற்றிய குறிப்புகளே இல்லாதபோது நாட்டுப்புறப் பாடல்களை ஆதாரமாக ஏற்க முடியாது என்றும் சொல்கிறார்.

சிவகங்கைச் சீமையைப் பற்றி எழுதியுள்ள ஆங்கிலேய அதிகாரிகள் குறிப்புகளிலும் குயிலி பற்றி இல்லை. போர் நாட்களில், நாட்குறிப்புகளை எழுதுவதற்காகவே கம்பெனி நியமித்த கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் குறிப்புகளில் குயிலி இல்லை. ஓர் ஆயுதக் கிடங்கே தகர்க்கப்பட்டிருந்தால் நிச்சயம் தங்களின் மிகப் பெரிய இழப்பை குறிப்பிட்டிருப்பார்கள். சிவகங்கைச் சீமையைப் பற்றி எழுதியுள்ள ஆய்வாளர்கள் ஜெகவீரபாண்டியனார், டாக்டர் கே.ராஜய்யன், பேரா ந.சஞ்சீவி, மீ.மனோகரன், முனைவர் கு.மங்கையர்க்கரசி, எஸ்.எம்.கமால் உள்ளிட்டோர் யாருடைய நூலிலும் குயிலி பற்றிய குறிப்புகள் இல்லை.

குயிலி கற்பனைதான் என்று சொல்ல தனக்கு யாதொரு முகாந்திரமும் இல்லையென்று சொல்லும் ஆய்வாளர், புனைவிலக்கிய எழுத்தாளர்களின் கற்பனையில் உதித்த குயிலி நம் கதைகளில், வாழ்வில் உலா வருவதற்கு யாதொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. வேலு நாச்சியாரின் தோழியாக அரசாங்கத்தால் நினைவுச் சின்னம் வைக்கப்பட்டிருக்கும் போது, வரலாற்று ஆதாரம் வேண்டுமென்கிறார். எழுதப்படாத வரலாறுகளைவிட திரிக்கப்படும் வரலாறுகள் சமூகத்திற்கு ஆபத்தானவை. திறந்த மனதுடன், குயிலியைப் பற்றி தமிழ்ச் சமூகத்தின் ஆய்வாளர்கள் உண்மைகளைப் பேச வேண்டிய நேரமிது என்பதையே நூல் கோருகிறது.

-அ.வெண்ணிலா 

மேலும் செய்திகள்