கருணை உள்ளமே கடவுள் வாழும் இல்லம்

இன்று (நவம்பர் 13-ந்தேதி) உலக கருணை தினம்.

Update: 2018-11-13 06:43 GMT
“கருணை பொங்கும் நெஞ்சம் அது கடவுள் வாழும் இல்லம் சிலர் கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளைத்தேடி அலைகின்றார்”

என்று ஒரு கவிஞர் எழுதினார். அப்பாடல் சினிமாப்பாடலாக இருந்தாலும் கருத்துள்ள பாடல். “கருணை என்பது கடவுள் மனிதன் மீது காட்டுவது” என்ற கருத்து இருந்தாலும் திருமந்திரம் படித்தவர்கள் திருமந்திரத்தின் கருத்துகளை உணர்ந்தவர்கள் மனிதன் கடவுள் நிலைக்கு உயரமுடியும். எனவே கருணை என்பது கடவுள் மனிதன் மீது காட்டுவது என்ற கருத்தை மாற்றி அறிவிலும், பண்பிலும், ஒழுக்கத்திலும், பேச்சிலும், செயலிலும் சிறந்தமுறையில் இருக்கும். வயதில் மூத்தவர்கள் அனைவரும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பர். அத்தகைய கருணை உள்ளம் கொண்டவர்கள் உயர்நிலையில் இருந்தால் நாட்டில் நல்லதே நடக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

திருவள்ளுவர் அருளுடைமை என்று ஒரு அதிகாரமே எழுதியுள்ளார். அதில்

“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள”

என்றார் திருவள்ளுவர். இக்குறளின் கருத்து “அருட்செல்வமே செல்வங்களுள் எல்லாம் உயர்ந்தது. பொருட்செல்வம் முட்டாள்களிடம் உள்ளது” என்பதே ஆகும். அக்காலத்தில் வாழந்த ஞானிகள், சித்தர்கள் அனைவரும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருந்தனர்,“வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். இதுதான் கருணை என்பதாகும். சீரடி சாய்பாபா, பட்டினத்தார் உள்பட மிகப்பெரிய ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது அவர்கள் தன்னிடம் இருந்த பொருளையெல்லாம் யாராவது எடுத்துக்கொள்ளட்டும் என்று வாரி இறைத்து விட்டு எதுவும் வேண்டாம் என்று துறந்தார்கள். கருணை அவர்களின் உள்ளத்தில் ஊறியது. எனவே கருணை உள்ளத்துடன் வாழ்ந்தார்கள் தன்னிடம் இருந்த பொருளையெல்லாம் கொடுத்துவிட்டு இறுதிவரை பிச்சையெடுத்து உணவு உண்டு வாழ்ந்தார் சீரடி பாபா. புத்தரும் தன்னுடைய பதவி, பணம், பொருள் அனைத்தையும் துறந்துவிட்டு கருணையைப் போதித்தார். எனவே கடவுளின் குணம் கருணை குணம். கடவுளிடம் அதிகம் உள்ளது கருணை. எனவே கடவுளிடம் நாம் கருணையைக் கேட்டால் கருணையை நமக்கு வழங்குவார். நாம் பிறர் மீது கருணை காட்ட வேண்டும். நாம் கருணைகாட்டுபவர் நல்லவராக இருக்க வேண்டும், திருவள்ளுவர் சான்றோருக்குரிய பண்புகளைக் கூறும் போது ‘அன்பு’ என்ற பண்பை முதலில் வைத்து எழுதியுள்ளார், “எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்வேறொன்று அறியேன் பராபரமே” என்று தாயுமானவர் வேண்டினார். திருச்சியில் கணக்கராகப் பணியாற்றி வந்த தாயுமானவர் “நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே” என்று பாடி அனைவரையும் அருளாளராக மாற்ற வழி செய்தார். “ஏழைகளின் பசி தீர்த்தலாகிய சீவகாருண்ட ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்று கூறி அதன்படிவாழ்ந்து காட்டினார் வள்ளலார். அணையா அடுப்பு ஏற்றி ஏழைகளின் பசித்தீயை அணைத்தார், “யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று அருளிய திருமூலர் “அன்பும், சிவமும் இரண்டென்பார் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்”, என்று திருமூலர் கூறியது எவ்வளவு பெரிய உண்மை. இந்த மாபெரும் உண்மையைப்புரிந்து கொண்டால் கோவில்களில் கூட்டம் இருக்காது. கோவில் உண்டியலும் நிரம்பாது, ஏழைகளின் வயிறு நிரம்பும், முதியோர் இல்லங்கள் மூடப்படும்,“காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே” என்ற உண்மையைப் பட்டினத்தார் தன்மகன் வடிவில் வந்த மருளுர் பெருமானால் உணர்ந்தார். பின்னர் பட்டினத்தார் தன் சொத்துக்களை ஏழைகளுக்கு அர்ப்பணிக்க சொல்லிவிட்டுத் துறவியாகிக் கோவணத்துடன் தலங்கள் பல சுற்றிப்பிச்சை ஏற்று வாழ்ந்தார். துளுவ நாட்டு மன்னன் பத்ரகிரியார் இவருக்குச் சீடராகி இவர் அருளால் முக்தி பெற்றார். எனவே கருணைதான் எல்லாவற்றிலும் உயர்ந்தது. வள்ளலார் அளவிற்கு வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடாவிட்டாலும் வாடிப்போன நலிந்துபோன தமிழர்கள் மீதாவது கருணையுடன் இருப்போம்.

-முனைவர் சி.வெற்றிவேல்

மேலும் செய்திகள்