காதல் மன்னன் நடத்திய மரண நாடகம்

இன்று (நவம்பர்17-ந்தேதி) நடிகர் ஜெமினி கணேசன் பிறந்தநாள்.

Update: 2018-11-17 07:50 GMT
ன் அப்பா அன்பானவர், அழகானவர், அடக்கமானவர், அமைதியானவர், நேர்மையானவர், அறிவுரை போதிப்பவர் மொத்தத்தில் எனக்குமிகவும் பிடித்தவர். அவ்வப்போது அப்பா சொல்வார், இந்த நேரத்தை தவறவிட்டால் அது திரும்ப வராது. அதனால் ஒவ்வொரு நிமிடத்தையும், பயனுள்ளதாகவும் உபயோகிக்கவேண்டும் என கூறுவார். இதனை நான் வேதவாக்காக இன்று வரை கடைப் பிடித்து வருகிறேன்.

அப்பா ஏழை, பணக்காரர் என வித்தியாசம் பாராமல் பழகுவார். குடிசைவீட்டிலும் உட்கார்ந்து சாப்பிடும் குணம்கொண்டவர். தனது உதவியாளருடன் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அவருடனே உட்கார வைத்து சாப்பிடுவார். என் அப்பாவிற்கு என்ன மரியாதை கொடுக்கபடுகிறதோ அதே அளவு தன் உடன்வந்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற தாராளமனம் கொண்டவர். அப்பா அவருடைய ரசிகர்களுடன் அன்போடு பழகுவார்.அவர்கள் வீட்டு திருமணம் அல்லது வேறு எந்த சுபநிகழ்வு என்று அவர்கள் அழைத்தாலும் அதற்கு மதிப்பு கொடுத்து சென்று வருவார்.

அப்பாவை எல்லோரும் கருமி என்று சொல்வார்கள். எனக்கும் அவரைப்பற்றி அந்த எண்ணம் உண்டு. ஆனால் கடைசியில் தான் தெரிந்து கொண்டேன் அப்பா அப்படிப்பட்டவர் இல்லை என்று. என்வீட்டிற்கு எதிரில் உள்ள சைக்கிள்கடைக்காரர் ஒருவர் சொன்னார், இன்னைக்கு நான் நல்லா இருக்கிறேன் என்றால் உங்கள் அப்பா தான் காரணம். நான் கஷ்டப்படும் போது பண உதவி செய்து என்னை இந்த அளவிற்கு உயர்த்திவிட்டவரே அவர்தான் என்று கூறினார். ஏன் இதை இன்று வரை சொல்லவில்லை என்று கேட்டதற்கு, உங்கள் அப்பா என்னிடம் “வலதுகை கொடுப்பதை இடது கைக்கு தெரியக் கூடாது” என்று கூறினார். அதனால்தான் அதனை இன்று வரை யாரிடமும் சொல்லவில்லை என்றார். இதை கேட்டவுடன் அப்பாவை பற்றி நான் தப்பாக நினைத்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

ஒருநாள் அப்பாவோடு நாங்கள் காரில் சென்ற போது எதிரில் வந்த ஒருவரை பார்த்து அப்பா கை அசைத்தார். ஆனால் அந்த நபர் அதனை கவனிக்கவில்லை. அப்போது என் தங்கை அப்பாவிடம் கேட்டார், ஏன் அப்பா அவர் தான் கை அசைக்கவில்லையே “நீங்கள்மட்டும் எதற்கு கைகாட்டினீர்கள் என்று”அதற்கு அப்பா சொன்னார், அவர் கைகாட்டி நான் கை அசைக்காமல்போனால் அவர் மனது கஷ்டப்படும், நான் கைஅசைப்பதால் எனக்கு ஏதும் நஷ்டம் கிடையாது என்றார். அடுத்தவர் மனம் கோணாமல் அவர் நடந்து கொண்ட விதம் இன்றும் என்மனதில் நீங்காமல் உள்ளது.

அப்பா ஒருமுறை தனுஷ்கோடிக்கு போன போது பெரிய புயல் தாக்கி அந்த ஊரே மிகவும் சேதம் அடைந்துவிட்டது. அங்கு அப்பா என்ன ஆனார் என்று யாருக்கும் தெரிய வில்லை. அப்போது பத்திரிகைகளில் எல்லாம், அது பற்றி பரபரப்பாக செய்தி வந்தது. அது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, நடிகர் முத்துராமன் எங்கள் வீட்டிற்கு வந்து எனது கங்கா பாட்டியிடம்(அப்பாவின் அம்மா), இப்படி நடந்து போச்சு மனதை தேற்றிக் கொள்ளுங்கள், இனி உங்கள் மகன் ஜெமினி வரமாட்டார் என்று வேதனையுடன் கூறினார். ஆனால் கங்காபாட்டி மிகவும் கடவுள் பக்தி உடையவர், அவர் கூறியதற்கு எந்த வருத்தமும் இல்லாமல் என் மகன் எங்க போய்ற போறான் 2 நாள்ல வந்துருவான்” என்று இயல்பாக கூறினார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கள் பாட்டி சொன்னது போலவே எனது அப்பாவும் 2 நாட்களில் வீடு திரும்பினார். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் என் அப்பா நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பு சமயத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்க முடியாமல் போனது.அப்போது என் அப்பாவை நாடினார்கள். ஆனால் அப்பா அதற்கு சம்மதிக்கவில்லை. காரணம் எஸ்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தை நான் தட்டி பறித்ததாக வெளி உலகம் பேசிவிடும் என்று எண்ணி மறுத்துவிட்டார். அதன் பிறகு எஸ்.எஸ்.ராஜேந்திரனிடம் இருந்து இந்த கதாபாத்திரத்தில் ஜெமினி நடிக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கடிதம் வந்த பிறகு தான் அப்பா அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படி எல்லா இடத்திலும் உயர்ந்த எண்ணத்துடனேயே வாழ்ந்த மாமனிதர்.

அந்த காலத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும் மலைகளுக்கு இடையில் எந்த விருப்பு, வெறுப்பு, போட்டி, பொறாமை இல்லாமல் தனி நட்சத்திரமாக மின்னியவர் என்அப்பா. எல்லா நடிகர்களுடனும் நட்புடனே பழகி வந்தார்.இவரது படங்கள் யாருக்கும் போட்டியாக இருந்ததே இல்லை. இவரது ரசிகர்கள் கூட்டம் என்றும் தனிதான்.அப்பா ஓய்வு எடுத்து நான் பார்த்ததே இல்லை. அவரது உடை, கண்ணாடிஅணியும் ஸ்டைல், நாற்காலியில் உட்காரும்விதம் எல்லாம் அழகுதான். நானே எத்தனையோ முறை ரசித்திருக்கிறேன்.

அப்பா கார் எப்போதும் வேகமாகவும், ஸ்டைலாகவும் ஓட்டுவார். எனக்கு 14 வயதில் கார் ஓட்ட கற்றுக் கொடுத்ததும் அப்பாதான்.நான்சுலபமாக கற்றுக் கொண்டேன்.அம்மாவுக்கும் கார் ஓட்ட கற்றுக் கொடுக்க நினைத்தார், அம்மா பயத்தில் சிறிது தவறு செய்தால் தலையில் நறுக்கென்று கொட்டு விழும். அதற்கு பயந்து கொண்டு அம்மா வேணாம், உங்க அப்பா கிட்ட கொட்டு வாங்கமுடியாது என்று கூறி கார் ஓட்ட கற்றுக் கொள்ளவே இல்லை. அந்த தருணம், மிகவும் இனிமையானது.நான் காதல் திருமணம் செய்ததால் என் மீது பெற்றோருக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது., திருமணத்துக்குப் பின் கணவருடன் தனிக் குடித்தனம் வந்து விட்டேன்.பெற்றோர் என்னிடம் பேசமாட்டார்கள்.

அப்பாவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் என்கையால் வரைந்த ஓவியத்தை பரிசாக கொடுப்பேன்.எனக்கு திருமணம் ஆன வருடம், அப்பாவின் பிறந்தநாளை ஏனோ நான் மறந்து விட்டேன். அப்பாவின் பிறந்த நாளன்று எனக்கு ஒரு போன் வந்தது, போனில் பேசியவர் உங்கள் அப்பா இறந்துவிட்டார் என்று கூறினார். கடும் அதிர்ச்சி அடைந்த நான் பதறி அடித்துக் கொண்டு என் கணவருடன் ஸ்கூட்டரில் அப்பா வீட்டிற்கு சென்றேன். அங்கு அப்பா தலையை சாய்த்து படுத்துக் கொண்டிருந்தார். நான் கதறியபடி அவர் பக்கத்தில் சென்று என்னஆச்சு அப்பா என்றேன். அவர் கண்களில் நீர் ததும்ப என்னை கட்டிப்பிடித்தப்படி“ஏம்மா இன்று என் பிறந்தநாள் மறந்துட்டியா என்றார். “என்னால் என் துக்கத்தையும் அழுகையையும் கட்டுபடுத்தவே முடியவில்லை. அவரை கட்டிக் கொண்டு கதறி அழுதேன். பின்னர் தான் தெரிந்தது என்னை வீட்டுக்கு வரவழைக்க அவரே(ஜெமினிகணேசன்)போன் செய்து இந்த மரண நாடகத்தை நடத்தி இருக்கிறார் என்பது.

அன்றில் இருந்து இன்று வரைஅவர் பிறந்தநாளை நான் மறந்ததே இல்லை.

அந்தக்காலத்தில் அப்பா நாள் முழுவதும் 4ஷிப்ட் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வார். வீட்டுக்கு திரும்பியதும் கீழே படுத்துக் கொண்டு அலுப்பு தீர எங்களை அவர் முதுகில் ஏறி நின்று மிதிக்கச் சொல்வார். ஞாயிற்றுக் கிழமையன்று கடற்கரைக்கு அழைத்துச்செல்வார். பின்னர் ஓட்டலில் மாசால் தோசையும்,பாதம் கீரும் வாங்கி கொடுப்பார்.

நடிகர் கமல்ஹாசனை பாலச்சந்தரிடம் அழைத்துச்சென்று காதாநாயகன் வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டார். அதற்கு பாலச்சந்தர் இவன் சின்னப்பையனாக இருக்கிறானே என்று கூறி இருக்கிறார். உடனே என் அப்பா அணிந்து இருந்த மூக்குக்கண்ணாடியை கமல்ஹாசனுக்கு மாட்டி விட்டு இப்போது பெரிய ஆளாகி விட்டான் என்று கூறவும் பாலச்சந்தர் சிரித்து விட்டாராம்.

இன்று அவருக்கு பிறந்தநாள்.என்றும்அப்பாவும்அம்மாவும் என்னுள் என் உருவத்தில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அப்பாவை நினைக்காதநாள் கிடையாது. இன்று என்னுள் இருக்கும் அனைத்து நல்ல குணங்களும் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது. அவரை நினைத்து நான் எழுதும் போதே என்கண்களில் கண்ணீர் வழிகிறது. அவ்வளவு பாசம் உள்ளஅப்பா மகளாக நாங்கள் வாழ்ந்து இருக்கிறோம். இந்த பந்தம் என்றும் தொடரும். இதனை நினைக்கும் போதும் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

-டாக்டர் கமலா செல்வராஜ் (நடிகர் ஜெமினிகணேசன் மகள்)

மேலும் செய்திகள்