பயணங்கள் இனிதாக அமைய...!

சாலைப் போக்குவரத்தில் வாகன நெருக்கடிகள் இன்று அதிகரித்திருக்கின்றன. அதே விகிதத்தில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

Update: 2018-12-06 05:40 GMT
இன்று இரு சக்கரவாகனம் இல்லாத வீடு இல்லை என்ற நிலைமை பெரும்பாலும் உருவாகி விட்டது. வசதியாய் கிடைத்த இந்த வாய்ப்புகளை எப்படி நாம் பயன்படுத்துகிறோம். வேகம் கூட்டி விரைவாகச் செல்வதை நம் சாமர்த்தியத்தின் அடையாளமாய் பயன்படுத்த முனைகிறோம். செல்போன் பேசிக் கொண்டும் செல்கிறோம். பெரியவர்களைவிட வாலிபர்களும், வளர்பிராயத்தினரும் தான் இருசக்கரவாகனத்தில் அதிகமாகவும் அடிக்கடியும் செல்போன் பேசிக்கொண்டே சவாரி செய்கிறார்கள்.

அப்படி போவதை சாதுர்யம் என்றும் கருதுகிறார்கள். ஆனால் அதுமுற்றிலும் தவறு செல்போன் பேச்சுக்கு அடுத்தபடியாக ஆபத்தை தருவது அவசரஉணர்வு. கல்லூரி ஆரம்பமாகும் நேரம், அலுவலகம் தொடங்கும் நேரம்,ரெயில் புறப்படும் நேரம், நமக்குத் தெரியும் வீட்டிலிருந்து புறப்பட்டால் எத்தனை நிமிடங்களில் அங்கு போய்ச் சேரலாம் என்பதையும் அனுபவ ரீதியாக அறிந்து வைத்திருப்போம். ஆனால் அந்த நேரக்கணிப்பை நாம் பொருட்படுத்துவது இல்லை. சின்னஞ் சிறு செய்திகளிலும் தேவையற்ற குறுக்கீடுகளிலும் நம் பொழுதை விரயமாக்குவோம். இழந்த பொழுதை ஈடுகட்ட வாகனத்தை அதிவிரைவாகச் செலுத்துவோம். அப்போது தாமதமாகி விட்ட படபடப்பும் நம்மைப் பதறவைக்கும் .அதே போல் வேலைக்குச் செல்பவர்கள் பணிபுரியும் இடத்துக்கும், வீட்டுக்குமான தொலைவை கடக்கக் கூடிய சராசரி வேகத்தையும் அதற்கான கால அளவையும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த நியமப்படி வீட்டைவிட்டுப் புறப்பட்டால் பதற்றமோ பரபரப்போ இருக்காது. பயணம் பாதுகாப்பானதாக அமையும். தாமதித்து புறப்பட்டோமானால் தாமதித்து விட்டோமே என்ற எண்ணம் நம்மை பதற்றமடையச் செய்யும். அதிவேகம், குறிப்பிட்டநேரத்துக்குள் போய் சேர வேண்டுமே என்ற மனஅவஸ்தை இரண்டும் கூடி நம் நிதானத்தைச் சிதறடிக்கும்.

ஒருசெயலை செய்து முடிக்க ஆகும் காலஅளவை நேர மேலாண்மை என்பார்கள். அதேபோல் வீட்டிலிருந்து புறப்பட்டுவேலைக்குச் செல்லும் இடம் வரைபயணிக்கும் காலஅளவை நிர்ணயித்துக் கொள்வதும் நேர மேலாண்மைதான். அந்நேரமேலாண்மையைக் கடைப்பிடித்தால் இடர்பாடு ஏதும் இன்றி வேலைக்குச் சென்று விடலாம். அதை அனுசரிக்கத் தவறும் போது என்றேனும் ஒருநாள் அது இடையூறாகிவிடும்.

எதிர்பாராத “அவசரம்” என்றாலும் இயல்பான வேகத்துடன் வாகனத்தையும் செலுத்துவது தான் நமது உயிருக்கும் உடைமைக்கும் நல்லது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு அவசர வேலை குறுக்கிடும். அப்போது அதி வேகத்தை பயன்படுத்தி நாம் போய்ச் சேர வேண்டிய இடத்துக்குப் பாதுகாப்பாக போய் விடவும் கூடும். இனி அது போல் ஒரு அவசரம், அதி வேகம் கூடாது எனவும் அவ்வாறு போவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் உள்ளுர நாம் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். அத்தகைய மனப்பான்மை உருவாகுமானால் சாலை விபத்துக்களை தவிர்ப்பது நமக்கு சுலபமாகி விடும். தவிரவும் தனி ஒருவர் வாகனம் செலுத்தும் போது ஓட்டத்தை கையாள்வது மிகச் சுலபமானதாக இருக்கும். இரண்டாமவர் பின்னால் இருந்தால் ஓரளவு சமாளிக்கலாம். ஆனால் அது மூன்று நான்கு பேராகும் பட்சத்தில் சமாளிப்பது கஷ்டமாகும். ஓட்டத்தை நிர்வகிப்பது இயலாமல் போகும். எனவே குடும்பத்துடன் இருசக்கரவாகனம் போவதை கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது.

தூக்கம் இன்மையும் தூக்கக்குறைவும் கூட சாலை விபத்துக்கு காரணமாகிறது.

எனவே சாலை விபத்துக்களிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் பெற கீழ்க்கண்ட உறுதிமொழிகள் மேற்கொள்வது நமக்கு உறுதுணையாக அமையும். பயண நேரத்தை முன் கூட்டியே திட்டமிடுவோம். எதிர்பாராத விபத்துக்கு காரணமாகும் அதி வேகத்தைத் தவிர்ப்போம் விரைவு என்பதை சாமார்த்தியத்தின் அடையாளமாக்காமல் தேவையின் அடிப்படையில் பயன்படுத்துவோம். பயணத்தின் போது செல்போன் அழைப்பு வந்தால் வாகனத்தை நிறுத்தி பேசிமுடித்த பின் பயணத்தைத் தொடர்வோம். எதிர்பாராத அல்லது அவசரமாய் போய்த்தான் ஆகவேண்டுமென்ற சந்தர்ப்பம் தவிர, அன்றாட முறைப் போக்குவரத்துக்கு குடும்பத்துடன் இருசக்கரவாகனத்தில் பயணிப்பது பாதுகாப்பல்ல என்பதை உணர்வோம்.

- தமிழினியன்

மேலும் செய்திகள்