கான்கிரீட் கலவையில் புதுமை

வானளாவிய உயரத்தில் கட்டிடங்கள் உயர்ந்து நிற்க வலுவான அஸ்திவாரம் மட்டும் காரணமல்ல, கான்கிரீட் கலவையும் முக்கிய காரணம்.

Update: 2018-12-12 06:56 GMT
ஒரு காலத்தில் கான்கிரீட் கலவை முழுவதும் மனித உழைப்பின் மூலமே உருவாக்கப்பட்டது. இன்று எந்திரங்கள் அந்த வேலையைச் செய்கின்றன. அந்த வகையில் கட்டுமான துறையில் அறிமுகமானதுதான் ‘செல்ப் கன்சாலிடேட்டிங் கான்கிரீட்’. இதை எஸ்.சி.சி. கலவை என்று சுருக்கமாக அழைப்பதுண்டு. தமிழில் ‘தானமைவு கான்கிரீட்’ என்கிறார்கள்.

அதென்ன எஸ்.சி.சி கான்கிரீட், இதில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது, இது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? என கேட்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக பரவலாக பயன்பாட்டில் உள்ள இந்த கான்கிரீட்டை முதன்முதலில் கண்டுபிடித்தது ஜப்பானியர்கள்தான். அதற்கு காரணம், கட்டுமான ஊழியர்களின் பற்றாக் குறைதான். குறைந்த ஆட்களைக் கொண்டு வேலைகளை முடிப்பதற்காக கண்டுபிடித்ததுதான் இந்த எஸ்.சி.சி. கலவை. கட்டுமான பணியின்போது கம்பி கட்டுமானத்திற்குள் கான்கிரீட் சீராக பரவ வேண்டும். ஆனால், கான்கிரீட் கலவை அவ்வளவு சுலபத்தில் இறங்காது. இதற்காக ஆட்களை வைத்து நீண்ட கம்பிகளால் குத்திக் குத்தி கான்கிரீட்டை செலுத்துவார்கள். கட்டிடங்கள் கட்டும்போது இதை பலரும் பார்த்திருக்கலாம்.

இப்படி கான்கிரீட்டை பரவச் செய்வதற்கு ஆட்கள் அதிகம் தேவைப்பட்டனர். அதை குறைக்கும் வகையில் புதிய முறையை ஜப்பானியர்கள் கண்டுபிடித்தார்கள். கம்பியால் குத்திவிட தேவையில்லாத விதத்தில் கான்கிரீட் தானே ஓடிப் பரவும்படி மாற்றி அமைத்தார்கள். கான்கிரீட் கலவை எப்படி சீராக ஓடிப் பரவும் என்று சந்தேகம் ஏற்படலாம். அதற்காக வேதிப் பொருட்களும் இதர சேர்மானங்களும் இதில் கலக்கப்படுகின்றன. அதாவது பாலிகார்பாக்சிலேட் பாலிமர்கள் இந்த சீரான பாய்ச்சலுக்கு உதவுகின்றன.

கலவையில் பிசுபிசுப்பு தன்மையை விரும்பிய அளவில் நிறுத்திக் கொள்ளவும் வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. தண்ணீருக்கும் சிமெண்டுக்குமான விகிதம் கான்கிரீட் பாய்ச்சலை உறுதிசெய்கிறது. இதில் பயன்படுத்தப்படும் ஜல்லிகளின் அளவு நுட்பமானதாக இருக்க வேண்டியது அவசியம். இப்படி கெட்டியான, அதேசமயம் தண்ணீர் பதத்தில் உலோக அச்சுக்களுக்குள் புகுந்து ஓடி, இறுகிக் கெட்டியாகி வடிவம் பெறுவதுதான் இந்த கலவையின் சிறப்பு.

தளம் அமைக்க ஏற்ற கான்கிரீட்டாக இன்று இது பெயர் பெற்றிருக்கிறது. இந்த எஸ்.சி.சி. கலவையில் தண்ணீர் கசிந்து வெளியேறும் பிரச்சினையில்லை. கான்கிரீட் கலவை காய்ந்த பிறகு உதிரும் பிரச்சினையில்லை. மாறாக கலவை ஒன்றாக இணைந்து உறுதியாகும். வேலையும் விரைவில் முடியும். கான்கிரீட் கலவையில் காற்று குமிழ்கள் ஏற்பட்டால், கட்டிடம் பாதிக்கப்படும். இதில் காற்றுக் குமிழ்கள் தங்காது. வேலை வெகு எளிதாக முடிந்துவிடும். குறைந்த நேரம் போதும். குறைவான ஆட்கள் போதும். இதனால் செலவுகள் குறையும்.

மேலும் செய்திகள்