ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 வரை ரூ.4,022 கோடி மதிப்பிற்கு பங்குகளை திரும்ப வாங்குகிறது ஓ.என்.ஜி.சி.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Update: 2019-01-22 08:39 GMT
புதுடெல்லி

பொதுத்துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ரூ.4,022 கோடி மதிப்பிற்கு பங்குகளை திரும்ப வாங்குகிறது. இந்த நடவடிக்கை ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 வரை நடைபெறுகிறது.

திரும்ப வாங்குகிறது

பங்குகளை திரும்ப பெறும் வழிமுறையில் சில பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்று கணிசமான நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது மத்திய அரசிடம் இருந்து குறிப்பிட்ட அளவு பங்குகளை திரும்ப வாங்கச் செய்வதன் மூலம் இவ்வாறு நிதி திரட்டப்படும் என தெரிகிறது. இந்த வகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், பங்கு ஒன்று ரூ.159 என்ற விலையில் ரூ.4,022 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குகிறது. இதற்கு கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி அன்று ஓ.என்.ஜி.சி. இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கைக்கு ஜனவரி 29-ந் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 11-ந் தேதி நிறைவடைகிறது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இப்போது மத்திய அரசுக்கு 65.64 சதவீத பங்கு மூலதனம் உள்ளது. இதன்படி ஓ.என்.ஜி.சி. நடவடிக்கையால் மத்திய அரசுக்கு மட்டும் ரூ.2,640 கோடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஓ.என்.ஜி.சி.யின் பங்குகளை திரும்ப வாங்கும் நடவடிக்கை நிர்ணயித்த இலக்கினை எட்ட உதவும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறி இருந்தன.

ஆனால் பங்கு விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி நிர்ணயித்த ரூ.80,000 கோடி இலக்கை விட ரூ.20,000 கோடி குறையும் என்றும், எனவே ரூ.60,000 கோடி வரை மட்டுமே திரட்டப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.32,142 கோடி திரட்டி இருக்கிறது.

1.03 சதவீத இறக்கம்

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது ஓ.என்.ஜி.சி. பங்கு ரூ.146.25-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.147.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.144.15-க்கும் சென்றது. இறுதியில் ரூ.144.75-ல் நிலைகொண்டது. இது, சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.03 சதவீத இறக்கமாகும்.

மேலும் செய்திகள்