உலக அளவில், 2018-ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 19 சதவீதம் சரிவடைந்தது

உலக அளவில், 2018-ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 19 சதவீதம் சரிவடைந்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி முகமை தெரிவித்துள்ளது.

Update: 2019-01-23 08:02 GMT
1.2 லட்சம் கோடி டாலர்

சர்வதேச அளவில், 2018-ஆம் ஆண்டில் 1.2 லட்சம் கோடி டாலர் அளவிற்கு அன்னிய நேரடி முதலீட்டு நடவடிக்கைகள் இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 19 சதவீதம் சரிவாகும். மேலும் 2009-ஆம் ஆண்டிற்குப் பின் இப்போதுதான் இந்த அளவிற்கு சரிவு ஏற்பட்டு இருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட வரி சீர்திருத்தங்களே இதற்கு காரணமாகும். சென்ற ஆண்டில் அமெரிக்க நிறுவனங்கள் டிரம்ப்பின் சீர்திருத்தங்களை பயன்படுத்தி 30,000 கோடி டாலர் முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளன.

ஐரோப்பாவில் நிகர அன்னிய முதலீடு இதுவரை இல்லாத அளவிற்கு 73 சதவீதம் சரிந்து 10,000 கோடி டாலராக குறைந்துள்ளது. 1990-ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே அதிகபட்ச சரிவாக இருக்கிறது. இது, அமெரிக்க நிறுவனங்கள் அயர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தம் துணை நிறுவனங்களின் பல ஆண்டு லாபத்தை தாய்நாட்டுக்கு எடுத்துச் சென்றதன் விளைவு ஆகும்.

கடந்த ஆண்டில் அமெரிக்கா 22,600 கோடி டாலரை அன்னிய நேரடி முதலீடாகப் பெற்றுள்ளது. 2017-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது முதலீடு 18 சதவீதம் குறைந்து இருக்கிறது. எனினும் அதிக அன்னிய முதலீட்டைப் பெற்று அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

அடுத்து சீனா 14,200 கோடி டாலரைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு அன்னிய முதலீடு 3 சதவீதம் உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள பிரிட்டனில் அன்னிய முதலீடு 20 சதவீதம் அதிகரித்து 12,200 கோடி டாலராக இருக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை மறுமுதலீடு செய்ததும், இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு 3 மடங்கு உயர்ந்ததுமே இதற்கு காரணமாகும்.

ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சி முகமையின் புள்ளிவிவரங்கள் இவ்வாறு கூறுகின்றன.

மேக் இன் இந்தியா

அதிக அளவில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்தார். அதனால் அன்னிய முதலீடு அதிகரிக்கத் தொடங்கியது. அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டுடன் ஒப்பிடும்போது அன்னிய நேரடி முதலீடு ஆக்கப்பூர்வமானது என்று கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்