உயர் பதவியில் பெண்கள்.. ஒத்துழைப்பு கொடுக்காத ஆண்கள்..

அலுவலக பணிக்கு செல்லும் பெண்கள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, நேர மேலாண்மை போன்ற செயல்பாடுகளால் பதவி உயர்வும் பெற்று விடுகிறார்கள்.

Update: 2019-02-10 07:00 GMT
லுவலக பணிக்கு செல்லும் பெண்கள் அதிகரித்து கொண்டிருக்கிறார்கள். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, நேர மேலாண்மை போன்ற செயல்பாடுகளால் பதவி உயர்வும் பெற்று விடுகிறார்கள். அப்படி ஆண்களுக்கு இணையாக உயர் பதவியை அலங்கரிக்கும்போது பலவித சிக்கல்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது.

பெண்களைப் பொறுத்தவரை பதவி உயர்வு என்பது மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தாலும், அந்த பதவியை தக்கவைப்பதற்கு அவர்கள் போராடவேண்டியதிருக்கிறது. பெண் தனது திறமையை நிரூபிக்காதவரை, அரைகுறைமனதோடுதான் ஆண்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள். அது அவர்கள் மரபணுவின் இயல்பு. பெண் தலைமை என்றதும் அவர்கள் மனதில் ஒருவித தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும். லேசான அலட்சியமும் தலைதூக்கும். உத்தரவுகளை மீறி நடக்க முயற்சி செய்வார்கள். தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்ணை காட்டிலும் தனக்கு திறமை அதிகம் இருப்பதாக வெளிக்காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள். ‘இந்தப் பதவிக்கு அந்த பெண் லாயக்கில்லை’ என்பது போன்றும் பேசுவார்கள்.

தலைமை பொறுப்பு வகிக்கும் பெண்கள் இதையெல்லாம் எதிர்கொள்ளும் தைரியமிக்கவர்களாக இருக்க வேண்டும். அதற்காக கடுமையாகவும் நடந்துகொள்ளக்கூடாது. சக பணியாளர்களுக்கு மத்தியில் ‘பாஸாக’ இருப்பதற்கு தன்னுடைய திறமையை நிரூபித்து காட்ட பொறுமை வேண்டும். சுற்றி உள்ளவர்களின் நடவடிக்கைகள் மனம் நோகும்படி அமைந்தாலும் சகிப்பு தன்மை கொண்டிருக்க வேண்டும். சட்டென்று டென்ஷனாகி அவர்களை கடிந்து கொள்ளக்கூடாது. அவர்களை சமாளிப்பதே தனித்திறமை.

பெரிய பதவிக்கு வந்தவர்களிடம் இனிமையும், பக்குவமும் தேவை. அனைவரிடமும் தன்மையாக பேசும் சுபாவம் கொண்டவர்களாக தங்களை வெளிக்காட்டிக்கொள்ள வேண்டும். இந்த சுபாவம் மற்றவர்களை அவர்களை நோக்கி ஈர்க்க உதவும். குறிப்பாக ஏதேனும் தவறு நடந்துவிட்டால் அந்த சமயத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் அணுகுமுறை மிக மென்மையானதாக இருக்கவேண்டும். அதே நேரம் மீண்டும் அதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும். அதனை சக ஊழியர்கள் மனதிலும் விதைத்துவிட வேண்டும். தன்னுடைய செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக பலர் முன்னிலையில் எவரையும் அவமானப்படுத்தக்கூடாது. தாங்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து சம்பந்தப்பட்டவரே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். குழுவாக இணைந்து செயலாற்றிய காரியங்கள் வெற்றிகரமாக நிறைவடையும்போது குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பாராட்டுவது கூடாது. அது அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கும். அனைவரையும் பாரபட்சம் இன்றி நடத்துவது தான் தலைமைக்கு அழகு.

சின்னச் சின்ன வேலையாக இருந்தாலும் அதனை செய்து முடிப்பவர்களை பலர் முன்பு பாராட்ட வேண்டும். அது மற்றவர்கள் மத்தியில் மதிப்பை ஏற்படுத்தி தரும். அது போன்ற பாராட்டை தானும் பெற விரும்புவார்கள். ஒருவரை பாராட்டும்போது அது மற்றவா்களை குறை கூறுவதாக இருக்கக்கூடாது. சக ஊழியர்கள் முன்பு உண்மையான உழைப்பு மதிக்கப்பட வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி முடிவு எடுக்கும்போது அது பற்றி அனை வருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த முடிவு பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி கருத்து கேட்க வேண்டும். இது ஒரு பாதுகாப்பான விஷயமும்கூட. அந்த முடிவின் விளைவு எப்படி இருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தலைமையை பாதிக்காது. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும். அதுதான் நல்ல தலைமைப் பண்பாக அமையும். அதையே மேலிடமும் எதிர்பார்க்கும்.

தலைமை என்பது முதன்மையாக இருக்க வேண்டுமே தவிர தனிமையாக இருக்கக் கூடாது. பதவியால் தங்களை யாரும் தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது. எப்போதும் போல அனைவரிடமும் பேசி பழகி நட்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். தான் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பதால் தன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். வழக்கம்போல அனைவரோடும் சேர்ந்து உணவருந்துவது, வெளியில் செல்வது என இயல்பாக இருக்கவேண்டும்.

அலுவலகம் சிறப்பாக நடக்க ஒழுங்கு முறை, கட்டுப்பாடு அவசியமானது. அதனை முறைப் படுத்த விரும்பினால் முதலில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் அதற்கேற்ப நடந்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் மற்றவர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எந்த கண்டிப்பும் தேவை இருக்காது. அலுவலக நடை முறையை முதலில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பின்பற்றவேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் பின்பற்றுவார்கள். அப்படியும் அவர்கள் கட்டுக்குள் வராவிட்டால் அதி காரத்தை அளவோடு பிரயோகப்படுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே அதிகாரத்தை பிரயோகப்படுத்தி எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைத்தால் அது எதிர் விளைவுகளை தோற்றுவித்துவிடும்.

தனக்கு பழக்கப்பட்டவர் தலைமையின் கீழ்தான் வேலை செய்கிறோம் என்ற எண்ணம் அவரின் கீழ் பணியாற்றும் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அது சவுகரியமாக அவர்களை பணியாற்ற வைத்துவிடும். அதேநேரம் மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தம், அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விவரிக்க வேண்டும். மற்றவர் செய்யும் சிறு தவறு கூட தலைமை பொறுப்பில் இருக்கும் தன்னை எந்த அளவு பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

தலைமை பொறுப்பு என்பது உயர்வானது. அதனால் தனது வேலைகள் எதையும் அவர்கள் தட்டிக் கழிக்கக்கூடாது. தட்டிக்கழித்தால் மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்கள். அதோடு பொறுப்பற்றவர்கள் செய்யும் வேலையை தட்டிகேட்கும் தார்மீக உரிமையையும் இழக்கவேண்டியதாகிவிடும். மேலும் பொறுப்பில்லாத தலைமை மற்றவர்களின் நகைப்பிற்கு இடமளித்துவிடும். தலைமையின் முழு தகுதியும் பொறுப்புணர்வில் தான் அடங்கி இருக்கிறது. அதற்கு அறிவுத் திறன் மட்டும் போதாது. மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதல் உழைப்பும் தேவை. இத்தகைய செயல்பாடுதான் மற்ற பணியாளர்களை கவரும். அதன் மூலம்தான் தலைமைக்குரிய மரியாதையை பெற முடியும்.

தலைமைப் பொறுப்புக்கு வரும் பெண்கள் ஒருபோதும் தன்னை பற்றி எழும் மோசமான விமர்சனங்களுக்கு பயந்து பின்வாங்கக்கூடாது. ஏதேனும் தவறு நடந்துவிட்டால், தான் இந்தப் பதவிக்கு லாயக்கு இல்லையோ என்று தன்னை குறைத்து மதிப்பிட்டுவிடவும்கூடாது. அது உங்களை பலவீனப்படுத்திவிடும். யார் எப்படி நடந்துக்கொண்டாலும் தலைமைப் பண்பில் இருந்து மாறக்கூடாது. வேண்டாதவர்களை பழிவாங்கும் எண்ணமும் வந்துவிடக்கூடாது. தலைமை பொறுப்பேற்கும் பெண்களை சுற்றி ஆயிரம் விமர்சனங்கள் எழலாம். ஒத்துழையாமை, பொறாமை போன்ற தொந்தரவுகளும் ஏற்படலாம்.

மேலும் செய்திகள்