கடல் அறிவியல் படிக்க ஆசையா?

கடல்போல பரந்து விரிந்த வேலைவாய்ப்புகளை கொண்டவை கடல் அறிவியல் படிப்புகள்.

Update: 2019-02-18 10:46 GMT
வித்தியாசமான சூழலில் பணியிடம் அமைவது பலருக்கும் வித்தியாசமான அனுபவத்தையும், மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தரக்கூடியது. கடல் அறிவியல், கடல் தொழில்நுட்ப பொறியியல், கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது அறிவியல், கடல் வணிக மேலாண்மை அறிவியல், கடல் தொழில்நுட்ப மேலாண்மையியல் என பல்வேறு படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் கடல்சார் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படுகின்றன.

சென்னை, மும்பை, கொல்கத்தா, கொச்சி, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் உள்ள கடல்சார் பல் கலைக்கழகங்களில் இந்த படிப்புகளை படிக்க முடியும்.

இந்த படிப்புகளில் சேர காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் எனப்படும் சி.இ.டி. நுழைவுத் தேர்வு கடல்சார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள், இந்த பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகளில் விரும்பிய படிப்பை தேர்வு செய்து படிக்கலாம்.

இந்த படிப்புகளில் சேர விரும்புபவர்கள் 1-8-2019-ந் தேதியில் 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். திரு மணம் ஆகாதவராக இருப்பது அவசியம். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். இது மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் தகுதி தேர்வுகளால் உறுதி செய்யப்படும்.

இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட அறிவியல் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ்-2 படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று அறிவியல் பட்டப்படிப்பை தேர்வு செய்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் லேட்டரல் என்ட்ரியாக இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர முடியும். இளநிலை கடல் சார் அறிவியல் படிப்புகளை படித்தவர்கள் முதுநிலை படிப்புகளில் சேரலாம்.

இந்த படிப்புகளுக்கான சி.இ.டி. நுழைவுத் தேர்வை எழுத விரும்பும், பொது, ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1000-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.700 செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. 6-4-2019-ந் தேதி முதல் 11-5-2019-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் மே 16-ந்தேதி தொடங்குகிறது. சி.இ.டி. தேர்வு ஜூன் 2-ந் தேதி நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 7-ந் தேதி முதல் தொடங்குகிறது. ஆகஸ்டு 1 முதல் வகுப்புகள் ஆரம்பமாகும்.

200 மதிப்பெண்களுக்கு சி.இ.டி. தேர்வு நடை பெறும். ஒரு கேள்விக்கு 1 மதிப்பெண் வழங்கப்படும். தவறான பதிலுக்கு எதிர்மறை மதிப்பெண் வழங்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் இருந்தும், பொதுப் பகுதிகள் மற்றும் பொது கணிதத்தில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும்.

கடல் அறிவியல் படிப்புகளை முடிப்பவர்கள், கப்பல்கட்டும் தளங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள், பொறியியல் நிறுவனங்கள், அரசு துறைகள் என பல்வேறு இடங்களிலும் வேலைவாய்ப்புகளை பெற முடியும். சிறந்த ஊதியமும், பதவி உயர்வும் பெற்றுத் தரக்கூடியவை. இது பற்றிய கூடுதல் விவரங்களை https://www.imu.edu.in/ என்ற இணையத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்