பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஏன்?

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் இந்தியா முழுவதும் நேற்று போராட்டம் தொடங்கினர். வருகிற 20-ந் தேதி வரை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

Update: 2019-02-19 06:01 GMT
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த நாடு தழுவிய போராட்டத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தின் முன்மொழிவின்படி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2017 முதல் ஓய்வூதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும். இரண்டாவது ஊதிய மாற்றகுழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும். பி.எஸ்.என்.எல்.-ன் நில மேலாண்மை கொள்கைக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். சொத்துக்களை மாற்றி கொடுப்பதை விரைந்து முடிக்க வேண்டும். வங்கிக்கடன் பெறுவதற்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும். 15 சதவீத ஊதிய பலன்களுடன் மூன்றாவது சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் போராட்டமாகும்.

தனியார் நிறுவனங்களுக்கு 4ஜி அலைக்கற்றையை 2010-ல் மத்திய அரசு வழங்கியது. ஆனால் இன்று வரையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. 4ஜி அலைக்கற்றை பி.எஸ்.என்.எல்.க்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே 4ஜி சேவையை அரசு தனியார் மூலம் மக்களுக்கு வழங்கி வருகிறது என்று நிதி ஆயோக் அமைப்பு கூறுவது ஏற்புடையது அல்ல. மேலும் இதே தனியார் நிறுவனங்கள் யாவும் 2002-க்கு முன்பு செல் சேவையை பி.எஸ்.என்.எல். வழங்கும் முன்பு வரையில் இன்கம்மிங் காலுக்கு கட்டணம் வசூல் செய்தது. அவுட்கோயிங் கால் ஒன்றுக்கு ரூபாய் 20 வரை கட்டணம் வசூலித்தது.

இந்தியாவில் 1995-ம் ஆண்டு தனியார் செல் சேவை தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால் அப்போது பி.எஸ்.என்.எல்.க்கு செல் சேவை தொடங்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தொழிற்சங்கங்கள் போராடிய பின்னர் 2002-ம் ஆண்டு தான் வழங்கப்பட்டது. பி.எஸ்.என்.எல். செல் சேவை தொடங்கிய பின்னர்தான் மக்களுக்கு கட்டுபடியான விலையில் செல் சேவை கிடைத்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தொடங்கிய போது அரசின் அமைச்சர்கள் குழு வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் இன்றைய அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவில்லை. அரசு துறையாக கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில், தொலைதூரப் பகுதிகளில் சேவை தருவதற்கும் அதனால் ஏற்படும் நஷ்டத்துக்கு ஈடாக அரசு இழப்பீட்டு நிதி வழங்கப்பட்டு வந்தது. 2013-ம் ஆண்டு முதல் அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. இருப்பினும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நஷ்டம் அடைந்தபோதிலும் தொடர்ந்து கிராமப்புறங்களிலும், மலைப்பகுதிகளிலும் சேவையை தந்து வருகிறது.

அரசின் பொதுபட்ஜெட்டிற்கு முந்தைய காலங்களில் கணிசமான பங்களிப்பை பி.எஸ்.என்.எல். தந்திருக்கிறது. வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். அதிகாரிகளும் ஊழியர்களும் சிறந்த சேவையை தந்திருக்கின்றனர். தனியார் நிறுவனங்கள் பேரிடர் காலங்களில் சேவை தர முன்வந்ததில்லை. புயல் வந்தபோதும், வெள்ளம் வந்தபோதும், பூகம்பம் ஏற்பட்டபோதும், பேரிடர் காலங்களின் போதும் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவையை புனரமைத்து தடையற்ற சேவையை உடனே வழங்கும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல்.

எப்போதும் குறையற்ற நிறைவான சேவை தரவே பி.எஸ்.என்.எல். முயற்சித்து வருகிறது. குறைகள் களையப்பட வேண்டுமே ஒழிய மூடிவிடுவது என்பது ஏற்புடையது அல்ல. லாபம் இல்லை, சம்பள உயர்வு கொடுக்க இயலாது, பென்சன் தொகையை அதிகரிக்க முடியாது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. பி.எஸ்.என்.எல். வியாபார நிறுவனமாக செயல்படுவது இல்லை எனவே லாபம் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை.

2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தொலைத்தொடர்புத் துறை மந்திரி மனோஜ் சின்ஹாவுடன் சங்க தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது 4ஜி அலைக்கற்றை விரைந்து வழங்கப்படும், அரசு விதிகளின்படி ஓய்வூதிய பிடித்தம் செய்யப்படும், ஓய்வூதிய மாற்றம் விரைவுபடுத்தப்படும், சம்பளமாற்றம் குறித்து மேலும் தெளிவுபெற வேண்டியுள்ளது. அதனையும் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் முன்னிலையில் மந்திரி உறுதி அளித்தார். 10 மாதங்கள் கடந்த பிறகும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் டிசம்பர் 3 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஏயுஏபி தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர்.

டிசம்பர் 2, 3 தேதிகளில் அதிகாரிகளுடன் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையின் குறிப்புகள் எழுத்துப்பூர்வமாக தரப்பட்டன. இதை தொடர்ந்து டிசம்பர் 3-ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று என்ன நிலைமை உள்ளது.

பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி அலைக்கற்றை வழங்குவதில் தயக்கம். வளர்ச்சிக்கு வங்கியிலிருந்து கடன் பெற அரசின் ஒப்புதல் கடிதம் வழங்கப்படவில்லை. தொலைத்தொடர்பு துறை நிலங்களை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு மாற்றி தந்திட வேண்டும். வங்கியில் கடன் பெற தொலைத்தொடர்புத்துறை அனுமதிக்கடன் வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். விரிவாக்கத்துக்கு தேவைப்படும் நிதியை பெற ஒரே வழி வங்கிக்கடன் பெறுவது அல்லது நிலங்களை பி.எஸ்.என்.எல். பெயருக்கு வந்துவிட்டால் கடன் பெறுவது எளிது. விரிவாக்கத்திற்கான செலவை எதிர்கொள்வதும் எளிது. தனியார் நிறுவனங்கள் பல லட்சம் கோடி கடனை பெற்று தொழில் தொடங்கி நடத்துகின்றன. ஆனால் பி.எஸ்.என்.எல். அரசின் பொதுத்துறை தனது சொந்த மூலதனத்தில் தொழில் நடத்தவும் அரசின் பொது பட்ஜெட்டிற்கு தனது பங்களிப்பை தந்திடவும் முயல்கிறது.

தேவை எல்லாம் ஒன்றே ஒன்றுதான் பொதுத்துறையை அரசு பாதுகாக்க வேண்டும். சமதள போட்டி என்ற அடிப்படையில் தனியாருக்கு எது எப்போது வழங்கப்படுகிறதோ, 4ஜி ஆனாலும் சரி வங்கிக்கடன் ஆனாலும் சரி, இதர பிற சலுகைகள் ஆனாலும் சரி போட்டியாளர் என்ற முறையில் பி.எஸ்.என்.எல்.க்கும் உடனுக்குடன் தரப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.

அப்போது தான் பி.எஸ்.என்.எல். நிலைத்து நின்று பொதுமக்களுக்கு கட்டுபடியான விலையில் தரமான சேவையை தொடர்ந்து வழங்க இயலும். பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், தொழிலாளர்களின் பொதுத்துறை காக்கும் போராட்டத்திற்கு பொது மக்களே ஆதரவு தருக. பொதுத்துறை காப்போம். தேச நலன் காப்போம்.

கே.நடராஜன், பி.எஸ்.என்.எல். போராட்டக்குழு தலைவர், தமிழ்நாடு.

மேலும் செய்திகள்