பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் ரூ.12,959 கோட

பிப்ரவரி மாதத்தில்

Update: 2019-03-20 07:14 GMT

பிப்ரவரி மாதத்தில், பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.12,959 கோடி பிரிமிய வருவாய் ஈட்டி உள்ளதாக காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டீ.ஏ) தெரிவித்துள்ளது.

34 நிறுவனங்கள்

நம் நாட்டில், ஆயுள் காப்பீடு சாராத துறையில் மொத்தம் 34 நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் 25 நிறுவனங்கள் பொதுக்காப்பீட்டுத் துறையைச் சேர்ந்தவை. 7 நிறுவனங்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களையும், 2 நிறுவனங்கள் விசேஷ காப்பீட்டு வசதியும் வழங்கி வருகின்றன.

நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய மொத்த பிரிமிய வருவாய் 23 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.12,959 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.10,574 கோடியாக இருந்தது. இதில் பொதுக்காப்பீட்டுத் துறையை சேர்ந்த 25 நிறுவனங்கள் ஈட்டிய வருவாய் ரூ.10,916 கோடியாக இருக்கிறது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 18.1 சதவீதம் உயர்வாகும். அடுத்து மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கி வரும் தனியார் துறையை சார்ந்த 7 நிறுவனங்கள் ரூ.1,123 கோடியை மொத்த பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளது. விசேஷ காப்பீட்டு வசதிகள் கொண்ட 2 நிறுவனங்களின் மொத்த பிரிமிய வருவாய் 80 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.920 கோடியாக அதிகரித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய புதிய பிரிமிய வருவாய் 33 சதவீதம் உயர்ந்து ரூ.18,209 கோடியாக உள்ளது. பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் இத்துறை நிறுவனங்கள் ரூ.1.77 லட்சம் கோடியை புதிய பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளன. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 8 சதவீத வளர்ச்சியாகும்.

நடப்பு நிதி ஆண்டில் (2018-19), பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில் ஆயுள் காப்பீடு சாராத 34 நிறுவனங்களின் (பொதுக்காப்பீடு+சிறப்புக் காப்பீடு) ஒட்டுமொத்த பிரிமிய வருவாய் 13.43 சதவீதம் உயர்ந்து ரூ.1.52 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.1.34 லட்சம் கோடியாக இருந்தது.

மருத்துவ சிகிச்சை

இந்தியாவில் ஏராளமான தொழிலகங்கள் நிறுவன பாணிக்கு மாறி வருவதால் தீ விபத்து போன்ற இடர்பாடுகளுக்கு எதிராக மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக காப்பீட்டு வசதி செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் உணரப்பட்டு வருகிறது. எனவே பொதுக்காப்பீட்டுத் துறையின் மொத்த பிரிமிய வருவாய், 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்