வாகனங்கள் விற்பனை புள்ளிவிவரம், ரிசர்வ் வங்கி நிலைப்பாடு தீர்மானிக்கும்

இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை மோட்டார் வாகனங்கள் விற்பனை புள்ளி விவரமும், பாரத ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடும் தீர்மானிக்கும் என சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

Update: 2019-04-01 06:56 GMT
மும்பை

சென்ற வார பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிகர அடிப்படையில் 508.30 புள்ளிகள் அதிகரித்து 38,672.91 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 166.10 புள்ளிகள் முன்னேறி 11,623 புள்ளிகளாக இருந்தது.

இந்நிலையில் இந்த வார வர்த்தகத்தின் போக்கை தீர்மானிக்க உள்ள முக்கிய காரணிகள் குறித்து ஆய்வாளர்கள் தமது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். மோட்டார் வாகனங்கள் விற்பனை புள்ளிவிவரம், பாரத ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு மற்றும் சர்வதேச நிலவரங்கள் அதை முடிவு செய்யும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பணக்கொள்கை ஆய்வறிக்கை

பாரத ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ஆய்வறிக்கை 2 மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகிறது. இவ்வங்கியின் ஆய்வுக்கூட்டம் வரும் 2, 3, 4 தேதிகளில் நடைபெற உள்ளது. வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு 4-ந் தேதி (வியாழக்கிழமை) வெளிவரும். நடப்பு வாரத்தில் பங்குச்சந்தை வட்டாரங்களில் கவனிக்கப்படும் மிக முக்கிய நிகழ்வாக இது இருக்கிறது.

இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி ரிசர்வ் வங்கி கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை அறிவித்தது. அப்போது இவ்வங்கி குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் 0.25 சதவீதம் குறைத்தது. எனவே ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு முறையே 6.25 சதவீதம் மற்றும் 6 சதவீதமாக இருக்கின்றன.

வாகனங்கள் விற்பனை

மார்ச் மாத விற்பனை புள்ளிவிவரங்களை பல வாகன நிறுவனங்கள் வெளியிட உள்ளன. இதில் மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, டாட்டா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், அசோக் லேலண்டு ஆகிய நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி நிலவரம் பங்குச்சந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும். மேலும், கடந்த 2018 டிசம்பர் காலாண்டிற்கான வெளிநாட்டுக் கடன் பற்றி புள்ளிவிவரம் வெளியாக உள்ளதால் அதன் தாக்கத்தையும் பங்குச்சந்தைகள் வெளிப்படுத்தலாம்.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்டு மற்றும் மின்சாரம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆதாரமாக விளங்கும் எட்டு உள்கட்டமைப்பு துறைகளாகும். தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியை கணக்கிடுவதில் இந்த துறைகளின் பங்கு 40 சதவீதமாக உள்ளது.

இன்று இந்த துறைகளின் பிப்ரவரி மாத உற்பத்தி வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரம் வெளிவரும் என்பதால் அதன் அடிப்படையிலும் பங்கு வியாபாரம் நடைபெற வாய்ப்பு உண்டு. கடந்த ஜனவரி மாதத்தில் முக்கிய துறைகளின் உற்பத்தி 1.8 சதவீதம் மட்டும் வளர்ச்சி கண்டு இருந்தது.

பயிர்கள் சாகுபடி

ரபி பருவ (2018 அக்டோபர்-2019 மார்ச்) பயிர்கள் சாகுபடி நிறைவடைந்துள்ள நிலையில் அது பற்றிய தகவல்களும் சந்தைகளின் வளர்ச்சியை தீர்மானிக்க வாய்ப்பு உள்ளது. உணவு தானியங்கள் உற்பத்தி பற்றிய மதிப்பீடுகளும் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தொடர்பாக பல்வேறு புள்ளிவிவரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையிலும் பங்கு வர்த்தகத்தின் போக்கு இருக்கும். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்கள் தொடர்பாகவும், சென்ற 2018-19 நிதி ஆண்டு தொடர்பாகவும் புள்ளிவிவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன்படியும் பங்கு வர்த்தகம் நடைபெறலாம்.

உலக நிலவரங்கள்

நடப்பு வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்வதில் உலக நிலவரங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னியப் பங்கு முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்றவை இந்த வார வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்