ஆதரவற்றவர்களின் ஆசிரியை

ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை எல்லோரிடமும் அமைவதில்லை. சிலரிடம் மட்டுமே அந்த குணம் நிரம்பியிருக்கிறது.

Update: 2019-04-14 06:23 GMT
தரவற்றவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை எல்லோரிடமும் அமைவதில்லை. சிலரிடம் மட்டுமே அந்த குணம் நிரம்பியிருக்கிறது. தான் சம்பாதித்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை ஆதரவற்றவர்களுக்கு ஒதுக்கி சேவையாற்றுபவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது மொத்த சம்பளத்தையும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு சமைப்பது முதல் கல்வி போதிப்பதுவரை அனைத்து பணிகளையும் தாய்மை உள்ளத்தோடு செய்து கொண்டிருக்கிறார்.

அவரது பெயர் டி.வி. ஜோதி லட்சுமி. 50 வயதாகும் இவர் திருப்பூர் அய்யங்காளிபாளையத்தில் உள்ள வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 11 ஆண்டுகளாக தனது சம்பளம் முழுவதையும் திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீவிவேகானந்த சேவாலய ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து அங்கேயே தங்கியிருந்து சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

அவரை சந்திக்க சென்றிருந்தோம். அனாதை இல்ல வளாகத்தில் ஒரு அடுப்பில் மரக்கட்டைகளை வைத்து தீ மூட்டி சமையல் செய்து கொண்டிருந்தார், ஜோதி லட்சுமி. புகை மூட்டத்துக்கு நடுவே வியர்க்க, விறுவிறுக்க நின்று கொண்டு சமையல் செய்து கொண்டிருந்த விதம் அவருடைய அர்ப்பணிப்பு, சேவை உள்ளத்தை வெளிப்படுத்தியது.

சமையலை முடித்த பின்பு அவரிடம் பேசினோம்!

உங்கள் குடும்ப பின்னணி குறித்து சொல்லுங்கள்?

‘‘நான் கோவையில் பிறந்து வளர்ந்தவள். பெற்றோர்: வெள்ளியங்கிரி - பாக்கியலட்சுமி. எனக்கு அக்காவும், தம்பியும் இருக்கிறார்கள். நான் 9-ம் வகுப்பு படித்துகொண்டிருந்தபோது எனது தாயார் இறந்து விட்டார். தந்தை தான் எங்களை வளர்த்து ஆளாக்கினார். பள்ளிப்படிப்பை கோவையில் உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் படித்து முடித்தேன். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. பி.எட், எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன். 23-வது வயதில் திருப்பூர் வந்தேன். எனது பெரியம்மாவுடன் தங்கியிருந்து இங்குள்ள தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்’’

ஆதரவற்ற குழந்தைகளுக்கு சேவையாற்றும் மனப்பான்மை உங்களுக்கு எப்படி வந்தது?

‘‘2000-ம் ஆண்டு அம்மாபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தேன். மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றினேன். அப்போது நோட்டு புத்தக கடையும் சொந்தமாக வைத்திருந்தேன். அந்த பள்ளியில் அறக்கட்டளை உறுப்பினராக இருந்த செந்தில்நாதன் அந்த பொறுப்பில் இருந்து விலகி, 2007-ம் ஆண்டு ஸ்ரீவிவேகானந்த சேவாலயத்தை தொடங்கினார். விருப்பமுள்ளவர்கள் சேவை மனப்பான்மையுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக்கொடுக்க வரலாம் என்றும், அதற்கு பணம் எதுவும் கொடுக்கமாட்டேன் என்றும் அவர் கூறினார்.

அவரின் சேவை மனப்பான்மையை ஆசிரியர்கள் பாராட்டினார்களே தவிர மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக்கொடுக்க யாரும் அங்கு செல்லவில்லை. தாயை இழந்து வாடும் துயரம் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கும் எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அங்கு சென்று 14 குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக்கொடுத்தேன். எனது சம்பளம் ரூ.5 ஆயிரத்தையும் சேவாலயத்துக்கு வழங்கினேன். நோட்டு புத்தக கடையில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் என் செலவுகளை சமாளிக்க பழகி கொண்டேன். ராமகிருஷ்ணரை பற்றி அறிந்து அவருடைய ஆன்மிக கொள்கையால் ஈர்க்கப்பட்டேன். அதனால் சேவை மனப்பான்மையோடு குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து அவர்களை கவனித்தேன்’’

திருமணம் செய்யாமல் இருக்கிறீர்களே.... அதற்கு என்ன காரணம்?

‘‘எனக்கு 21 வயதில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருதயத்தில் உள்ள இரண்டு வால்வுகள் பழுதாகி கடும் போராட்டத்திற்கு மத்தியில் உயிர் பிழைத்தேன். அதன் காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. ‘விவேகானந்தரின் கடிதங்கள்’ என்ற புத்தகம் எனது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. அந்த புத்தகத்தை படித்து முடிந்தபோது ஆதரவற்றவர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற உணர்வு எனக்குள் மேலோங்கியது. ராமகிருஷ்ணரின் ஆன்மிக கொள்கை என்னை ஈர்த்ததால் சேவாலய குழந்தைகளுக்கு சேவையாற்ற முன்வந்தேன்.

அரசுப்பணி எப்போது கிடைத்தது?. அதன்பிறகும் உங்களின் சேவை தொடர்வது பற்றி....?

2008-ம் ஆண்டு அய்யங்காளிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. நான் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றியபோது என்னுடன் 79 ஆசிரியர்கள் பணியாற்றினார்கள். எனக்கு மட்டும்தான் முதலில் அரசு பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. இதை ராமகிருஷ்ணரின் அருள் என்றே கூறுவேன். அரசு பணியில் சேர்ந்ததும் மாதம் ரூ.12,500 சம்பளம் கிடைத்தது. அந்த சம்பளம் முழுவதையும் ஸ்ரீவிவேகானந்த சேவாலயத்துக்கு கொடுத்தேன். சாரதாதேவியின் தொண்டு உள்ளமும் என்னை கவர்ந்தது. அதனால் ஆதரவற்ற இல்லத்திலேயே தங்கியிருந்து குழந்தைகளுக்கு சேவையாற்ற தொடங்கினேன்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு முடிந்தவரை ஒழுக்கத்துடன் கல்வி அளிக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. எனது சம்பள பணத்தில் மாத்திரை செலவுக்காக ஆயிரம் ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு மீதம் முழுவதையும் சேவாலயத்துக்கே கொடுத்து அங்கு தங்கி குழந்தைகளுக்கு பணி செய்து வருகிறேன். இது எனக்கு மனநிறைவை கொடுக்கிறது. உயிர் உள்ளவரை சேவை தொடர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

எனது சகோதரி தாராபுரம் அருகே கன்னிவாடி பகுதியில் வசிக்கிறார். அவர் வீட்டுக்கு இதுவரை 2 முறை சென்றிருக்கிறேன். அவர்களின் குடும்ப தேவைக்கு கூட நான் பணம் கொடுத்தது கிடையாது. என்னைத்தான் அவர்கள் இங்கு வந்து பார்த்து செல்வார்கள். எனது சகோதரர் வீட்டுக்கும் செல்லவில்லை. இங்கேயே தங்கிவிட்டேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள்’’

உங்கள் சேவை உணர்வை பற்றி சக ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

‘‘சேவை மனப்பான்மையுடன் சேவாலயத்தில் தங்கியிருந்து பணியாற்றுவதால் அவர்கள் என்னை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கிறார்கள். ஆசிரியர்கள் அனைவரும் என்னிடம் மிகவும் அன்போடு நடந்து கொள்வார்கள். அப்போதுதான் மதிப்புமிக்க இடத்தில் நான் இருப்பதை உணர்ந்தேன். என்னுடன் பணியாற்றும் ஆசிரியைகள் தங்கள் வீட்டில் தயாரித்த உணவுகளை கொண்டு வந்து என்னிடம் கொடுத்து சாப்பிட வைத்து மகிழ்வார்கள்.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?.

‘‘மாணவ-மாணவிகள் பெற்றோருக்கு உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே எனது அறிவுரை. தாய், தந்தை ஏதோ ஒரு காரணத்துக்காக ஒருநாள் திட்டியிருப்பார்கள். மற்ற நாட்கள் உங்களுடன் அன்போடு இருந்திருப்பார்கள். ஆனால் ஒருநாள் திட்டுவதை ஏற்க முடியாமல் கோபமடைந்து, உங்களை சுற்றியிருப்பவர்களின் தற்காலிக அன்புக்காக அடிபணிந்து அவர்களை முழுவதுமாக நம்பி ஏமாறக்கூடாது. குறிப்பாக மாணவிகள் கவனமாக இருக்க வேண்டும். விரும்பிய பொருளை பெற்றோர் வாங்கிக்கொடுக்காத நிலையில் மற்றொருவர் மூலமாக அந்த பொருள் கிடைத்தால் அவர்கள் பின்னால் செல்வது கூடாது.

இன்றைய மாணவ-மாணவிகளிடம் கீழ்படிதல் பழக்கம் குறைந்து வருகிறது. பொதுவாக மாணவிகள் நன்றாக படிக்கும் பழக்கத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் சில ஒழுக்க குறைபாடுகள் இருந்தாலும் படிப்பில் கவனம் செலுத்தி மதிப்பெண் பெற்று விடுகிறார்கள். ஆனால் மாணவர்களோ தடம் மாறி சென்று படிப்பை கோட்டை விட்டு விடுகிறார்கள். அதனால் மாணவிகளை விட, மாணவர்களுக்கு தான் அறிவுரை அதிகம் வழங்குவேன். செல்போன் மாணவ-மாணவிகளை சீரழித்து வருகிறது. அதற்கு அடிமையாகிவிடக்கூடாது. எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டும், செல்போனை கையில் வைத்துக்கொண்டும் பெற்றோர் இருந்தால் குழந்தைகளிடமும் அத்தகைய மனோபாவம் வந்துவிடும். அவர்களிடம் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தினால் கேட்கமாட்டார்கள். அதுபோல் தந்தை, தாய் எந்த நடைமுறையை கடைப்பிடிக்கிறார்களா? அதை பின்பற்றிதான் குழந்தைகளும் வளர்வார்கள். முடிந்தவரை தாய்மார்கள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை குழந்தைகளோடு உடன் இருந்து அவர்களை கவனிக்க வேண்டும். பெண் குழந்தைகள் தனது தாயாரிடம் சின்ன விஷயமாக இருந்தாலும் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் தாயாரிடம் மறைக்கக்கூடாது என்ற மனநிலை அவர்களுக்கு வர வேண்டும்’’

சேவாலயத்தில் தங்கியிருக்கும் மாணவர்கள் பற்றி...?

‘‘தாய், தந்தை இல்லாதவர்கள், தாயோ அல்லது தந்தையோ இல்லாதவர்கள், தாய், தந்தை இருந்தும் கைவிடப்பட்ட குழந்தைகள்தான் இங்கு தங்கியிருக்கிறார்கள். ஆன்மிக போதனைகள், பிரார்த்தனைகளை தினமும் கற்கிறார்கள். தாய், தந்தையின் சிறப்பு குறித்து கூறுகிறோம். இங்குள்ள சில குழந்தைகளின் தாய்மார்கள் கணவரை பிரிந்து வேறு நபருடன் சேர்ந்து வாழ்க்கை நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட தாய்மார்கள் தனது குழந்தைகளை பார்க்க வந்தாலும் அவர்கள் தனது தாயை வெறுப்பதில்லை. மாறாக அவர்களிடம் அன்பு தான் அதிகமாக இருக்கிறது. பெரியவர்களை மதிக்க வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே ஒருவனை உயர்த்தும் என்பதை அறிய வைத்துள்ளோம்’’ என்றார், ஆதரவற்றவர்களின் ஆசிரியை ஜோதி லட்சுமி.

மேலும் செய்திகள்