இருவிரலால் இணையற்ற பாடம்

இரண்டு விரல்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தி அசத்துகிறார், ஆஷா ஜக்தாப்.

Update: 2019-04-14 07:08 GMT
ரண்டு விரல்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.
இரண்டு விரல்களை மட்டும் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தி அசத்துகிறார், ஆஷா ஜக்தாப். 38 வயதாகும் இவர் 16 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இதற்குள் 15 முறை பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு காரணம் அவருடைய விரல்கள்தான். அவருக்கு இரு கைகளிலும் தலா ஒரு விரல் மட்டுமே இருக்கிறது. அதனால் சிறுவயதில் இருந்தே பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகிறார். பள்ளி படிப்பின்போதும், கல்லூரி படிப்பின்போதும் சராசரி மாணவர்களுடன் சேர்த்து படிப்பதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

சிறப்பு பள்ளியில் சேர்க்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் ஆஷாவின் தந்தை சுதம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. சாதாரண குழந்தைகளை போலவே மகளை வளர்த்து வழி நடத்தி இருக்கிறார். இரண்டு விரல்களை கொண்டு ‘எப்படி எழுத வேண்டும்’ என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். தந்தையின் ஊக்கத்தாலும், அயராத முயற்சியாலும் சிறு பருவத்தில் சராசரி மாணவர்களை போலவே வேகமாக எழுதுவதற்கு பயிற்சி பெற்று விட்டார். இரு விரல்களை கொண்டே 10-ம் வகுப்பு தேர்வையும் எழுதி முடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

‘‘10-ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு யாருடைய உதவியையும் நான் நாடவில்லை. தேர்வையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடித்துவிட்டேன். அதை பார்த்து மற்றவர்கள் ஆச்சரியம் அடைந் தனர்’’ என்கிறார்.

ஆஷா மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே பகுதியை சேர்ந்தவர். மருத்துவ படிப்பு படித்து டாக்டராக சேவை செய்ய வேண்டும் என்பது அவருடைய தந்தையின் கனவாக இருந்திருக்கிறது. ஆனால் ஆஷா பள்ளியில் படிக்கும்போதே தந்தை இறந்துவிட்டார். அவரது கனவை நனவாக்கும் முயற்சியில் ஆஷா ஈடுபட்டிருக்கிறார். ஒருவழியாக போராடி இறுதியில் புனே பல்கலைக்கழகத்தில் ஆசிரியை பயிற்சியில் டிப்ளமோ படித்திருக்கிறார். அந்த கல்லூரி முதல்வரும் முதலில் ஆஷாவை சிறப்பு கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார். ஆஷாவோ ஆறு மாதங்களில் தனது தனித்திறமையை நிரூபிப்பதற்கு அவகாசம் கேட்டிருக்கிறார். அதுபோலவே சிறப்பாக செயல்பட்டு அனைவருடைய பாராட்டையும் பெற்றுவிட்டார். செய்முறை சார்ந்த பாடத்திட்டங்களையும் தடுமாற்றமின்றி செய்து முடித்து அசத்திவிட்டார்.

‘‘பத்துவிரல்கள் இருந்தால்தான் வாழமுடியும் என்ற நிலை எனக்கு இல்லை. விரல்களை விட எனது குழந்தைகள், மாணவர்களின் நலன்தான் எனக்கு முக்கியம்’’ என்கிறார்.

ஆஷா ஆசிரியை பயிற்சியை முடித்துவிட்டு 2002-ம் ஆண்டு சிஹால்கான் கிராமத்திலுள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார். அடுத்த ஆண்டே முன்மாதிரி ஆசிரியைக்கான விருதை பெற்றுவிட்டார். தற்போது நார்ஹே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஆஷாவின் போராட்டம் சமூகத்துடன் மட்டுமின்றி குடும்பத்தினருடனும் தொடர்ந்திருக்கிறது. பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்திருக்கிறார்.

‘‘6 வருடங்களுக்கு முன்பு எனது கணவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை சித்ரவதை செய்தார். தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து உதைப்பார். இரண்டு ஆண்டுகள் யாருடனும் என்னை பேச அனுமதிக்கவில்லை. என் உடல் மீது மண் எண்ணெய் ஊற்றி எரித்து கொல்வதற்கு முயற்சி செய்தார். பல முறை என் குழந்தைகள்தான் என் உயிரை காப்பாற்றினார்கள். எனது கனவுகளை மாணவர்கள் மூலம் நிஜமாக்குவதற்கு விரும்பு கிறேன். அவர்களை முன்னேற்றுவதுதான் என் லட்சியம்’’ என்கிறார்.

மேலும் செய்திகள்