வினிகரில் கழுவினால் ‘வீரியம்’ குறையும்

வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதிலும், உடலில் உள்ள நீர்ச்சத்துக்களை சீராக பராமரிப்பதிலும் பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

Update: 2019-04-14 07:13 GMT
வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதிலும், உடலில் உள்ள நீர்ச்சத்துக்களை சீராக பராமரிப்பதிலும் பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

பழங்களை விளைவிப்பதற்கு பூச்சிக்கொல்லிகளும், ரசாயன உரங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன. காய்களாக அறுவடை செய்யப்படும் அவைகளை விரைவாக பழுக்க வைப்பதற்கும், கவர்ச்சிகரமான தோற்ற பொலிவை ஏற்படுத்துவதற்கும் ரசாயனங்களை பயன்படுத்துகிறார்கள்.

பழங்களில் படிந்திருக்கும் நச்சுத் தன்மை கொண்ட ரசாயனங்களை நீக்குவதற்கு எளிய வழிமுறைகளை கையாளலாம். காய்கறிகள் மற்றும் பழங்களின் மேல்புற தோலில் படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி போன்ற ரசாயனங்களை உப்பு நீர் நீக்கி விடும் என்பது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுபோல் குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலமும் 70 முதல் 80 சதவீதம் வரை படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை நீக்கிவிடலாம்.

கொய்யா, திராட்சை, ஆப்பிள், பிளம்ஸ், மாம்பழம் போன்ற பழ வகைகளை இரண்டு, மூன்று முறை தண்ணீரில் கழுவி சாப்பிடுவது நல்லது. அகன்ற பாத்திரத்தில் 4 கப் மிதமான சுடுநீரை ஊற்றி அதில் 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து அதில் பழங்களை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் நன்றாக கழுவி சாப்பிட வேண்டும். பழங்களை கழுவுவதற்கு உப்பு நீரை விரும்பாதவர்கள் வினிகரை பயன்படுத்தலாம். அகன்ற பாத்திரத்தில் நான்கு பங்கு நீருடன் ஒரு பங்கு வினிகரை சேர்த்து கலக்க வேண்டும். அதில் பழங்களை போட்டு அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் நன்கு கழுவி சாப்பிடலாம். வினிகரில் பழங்களை கழுவுவதன் மூலம் அதில் இருக்கும் நச்சுக்கள் நீங்குவதோடு பழங்களும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

பழங்களை நீரில் ஊறவைத்து கழுவி சாப்பிட நேரம் இல்லாத பட்சத்தில் ஸ்பிரே பயன்படுத்தி பழங்களை சுத்தப்படுத்தலாம். ஒரு கப் நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு டேபிள்ஸ்பூன் வினிகரை கலந்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்ரே போல் தெளித்து உடனே குளிர்ந்த நீரில் கழுவி சாப்பிடலாம். பேக்கிங் சோடாவை பயன் படுத்தி கழுவுவதன் மூலமும் 96 சதவீதம் பழங்களை தூய்மைப்படுத்திவிடலாம். அகன்ற பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்கி பழங்களை சில நிமிடங்கள் ஊற வைத்தால் போதும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி ருசிக்கலாம். பொதுவாக பழங்களின் தோல் பகுதியை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். மெல்லிய தோல்களை கொண்ட பழங்களை உப்பு நீர், வினிகர் போன்றவற்றை பயன்படுத்தி கழுவுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கழுவும்போது பழங்களின் தோல்பகுதி சேதமடைந்துவிடும்.

மேலும் செய்திகள்