பயணிகள் வாகனங்கள் விற்பனையில் மாருதி சுசுகி முதலிடத்தில் நீடிப்பு

சென்ற நிதி ஆண்டில் 4.7 சதவீத வளர்ச்சி பயணிகள் வாகனங்கள் விற்பனையில் மாருதி சுசுகி முதலிடத்தில் நீடிப்பு

Update: 2019-04-16 05:17 GMT
புதுடெல்லி

சென்ற நிதி ஆண்டில் 4.7 சதவீத வளர்ச்சி கண்டுள்ள நிலையில் பயணிகள் வாகனங்கள் உள்நாட்டு விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முதலிடத்தில் நீடிக்கிறது.

தொழிற்சாலைகள்

மாருதி சுசுகி நிறுவனம் 1983-ஆம் ஆண்டில் இந்திய செயல்பாட்டை தொடங்கியது. குருகிராம், மானேசர் ஆகிய இடங்களில் இதன் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி நிலவரங்கள் பொதுவாக நன்றாக இருந்து வருகின்றன.

சென்ற நிதி ஆண்டில் (2018-19), மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த பயணிகள் வாகனங்கள் விற்பனை 18,62,449-ஆக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 4.7 சதவீத வளர்ச்சியாகும். ஏற்றுமதி 1,08,749 கார்களாக உள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் பயணிகள் வாகனங்கள் விற்பனையில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

மார்ச் மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 1,58,076 கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தைக் காட்டிலும் இது 1.6 சதவீதம் குறைவாகும். உள்நாட்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 0.7 சதவீதம் குறைந்து 1,47,613-கார்களாக இருக்கிறது. இது 7 மாதங்களில் இல்லாத பின்னடைவாகும்.

டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.1,489 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 7 சதவீதம் குறைவாகும். அப்போது லாபம் ரூ.1,799 கோடியாக இருந்தது.

பங்கு விலை

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது மாருதி சுசுகி நிறுவனப் பங்கு ரூ.7,349-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.7,381-க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,293.60-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.7,336.55-ல் நிலைகொண்டது. இது, கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.06 சதவீத ஏற்றமாகும்.

மேலும் செய்திகள்