10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனா உடனான வர்த்தகத்தில் பற்றாக்குறை குறைந்தது

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Update: 2019-04-19 12:33 GMT
புதுடெல்லி

சீனா உடனான வர்த்தகத்தில் பற்றாக்குறை, சென்ற நிதி ஆண்டில் (2018-19) 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்து இருக்கிறது.

வர்த்தக பங்குதாரர்

நீண்ட காலமாக நமது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக சீனா இருந்து வருகிறது. அங்கிருந்து நம் நாடு அதிகமாக இறக்குமதி செய்வதால் அந்நாட்டுடன் நமக்கு வர்த்தக பற்றாக்குறை (இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையிலான வித்தியாசம்) அதிகமாக இருக்கிறது. சீனாவில் ஏற்றுமதி அதிகம் என்பதால் அங்கு பொதுவாக வர்த்தக உபரி (ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையே உள்ள வித்தியாசம்) நிலவுகிறது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் நம் நாட்டில் இருந்து சீனாவிற்கு 1,700 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 31 சதவீத வளர்ச்சியாகும். இதே காலத்தில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி (7,600 கோடி டாலரில் இருந்து) 7,000 கோடி டாலராக குறைந்து இருக்கிறது.

எனவே சீனா உடனான வர்த்தகத்தில் நம் நாட்டிற்கு 5,300 கோடி டாலர் அளவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட இது 1,000 கோடி டாலர் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இந்த அளவிற்கு பற்றாக்குறை குறைந்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனா உடனான வர்த்தகத்தில் பொதுவாக நமக்கு அதிக அளவில் பற்றாக்குறை இருந்து வருகிறது. எனவே அதைகுறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 380 வகையான சரக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் தோட்ட விளைபொருள்கள், ஜவுளி தயாரிப்புகள், ரசாயனம், மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இடம் பெற்றுள்ளன.

ஒட்டுமொத்த இறக்குமதி

கடந்த 2018-19 நிதி ஆண்டில், நாட்டின் ஒட்டுமொத்த சரக்குகள் இறக்குமதி 8.99 சதவீதம் அதிகரித்து 50,744 கோடி டாலராக உள்ளது. மொத்த ஏற்றுமதி 33,102 கோடி டாலராக இருக்கிறது. இது 9.06 சதவீத உயர்வாகும். எனவே சென்ற நிதி ஆண்டில் வர்த்தக பற்றாக்குறை 17,642 கோடி டாலராக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் பற்றாக்குறை 16,200 கோடி டாலராக இருந்தது.

மேலும் செய்திகள்