‘ஈ பான் கார்டு’ யாரெல்லாம் பெறலாம்? எப்படிப் பெறலாம்?

ஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள், ஆதார் எண்ணோடு மொபைல் எண்ணையும் இணைத்துள்ளவர்கள் வருமானவரித் துறையின் இணையதளம் மூலமாக எலக்ட்ரானிக் பான் கார்டு எனப்படும் ‘ஈ பான்’-ஐ (e-PAN) பெறலாம்.

Update: 2019-04-20 11:25 GMT
தற்போதைய நிலையில், இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (HUfs), அறக்கட்டளைகள், நிறுவனங்கள், உரிய வயதை அடையாத மைனர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் (NRI) போன்றோர் இணையம் வழியாக எலக்ட்ரானிக் பான் கார்டை பெறமுடியாது.

ஒருவருடைய வருமானம், வருமானத்துக்கான ஆதாரம், செலுத்திய வரி போன்றவற்றை அறிந்துகொள்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் பான் கார்டு உதவுகிறது.

கீழ்க்கண்ட நடைமுறைகளின்போது பான் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது...

ரூ. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அசையாச் சொத்துக்களை வாங்கினாலும் விற்றாலும்.

ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமான வங்கிப் பரிவர்த்தனைகளின்போது.

வங்கிக் கணக்கு அல்லது டீமேட் கணக்குத் தொடங்கும்போது.

மோட்டார் வாகனங்களை வாங்கும்போதும், விற்கும்போதும்.

வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது.

இந்நிலையில்தான் ‘ஈ பான்’, வசதியாக வந்து அமைந்திருக்கிறது. இதனால் உருவடிவில் பான் கார்டை வைத்துத் திரிய வேண்டியதில்லை.

டிஜிட்டல் கையெழுத்துடன், மின்னணு வடிவத்தில் பெறக்கூடிய பான் கார்டைத்தான் எலக்ட்ரானிக் பான் கார்டு அல்லது மின் பான் அட்டை என்கிறோம்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில், மின் பான் எண் வழங்கப்படுகிறது. ஏற்கனவே உருவடிவில் பான் கார்டு பெற்றவர்களும் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மின் பான் கார்டை பெறலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.

ஈ பான் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது? ஏற்கனவே பான் கார்டு இல்லாதவர்கள் ஈ பான் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் பெற்றவர்கள், அந்த ஆதார் எண்ணோடு தங்களுடைய செல்போன் எண்ணை இணைத்தவர்கள் இந்திய வருமானவரித் துறையின் இணையதளத்துக்கு (http://incometaxindiafiling.gov.in) சென்று விண்ணப்பிக்கலாம்.

வாடிக்கையாளரைப் பற்றிய தகவல்கள் (கே.ஒய்.சி.) அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை பயன்படுத்துவதற்கு ஏற்ற கடவுச் சொல் (ஓ.டி.பி.) மூலம் உறுதி செய்யப்படும்.

ஆதார் எண்ணில் உள்ள தகவல் தொகுப்பின் அடிப்படையில் ஈ பான் வழங்கப்படும். உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை உரிய வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மின் பான் அட்டை பெற்றவர்களுக்கு உருவடிவ பான் கார்டு வழங்கப்படாது.

மேலும் செய்திகள்