தினம் ஒரு தகவல் : பசி இல்லாத வாழ்க்கை

இன்றைக்குப் பலரும் பசியே இல்லை என்று சாதாரணமாக சொல்கிறார்கள்.

Update: 2019-04-24 03:48 GMT
பசி என்பது உலகம் அனைத்துக்குமான பொது மொழி. என்றாலும், ஒருவருடைய பசியின் மொழியை இன்னொருவர், தான் உணரும் வரை புரிந்துகொள்ள முடியாது. முன்பெல்லாம் பசித்து சாப்பிட்ட காலம் இருந்தது. இன்றைக்குப் பலரும் பசியே இல்லை என்று சாதாரணமாக சொல்கிறார்கள். ஆனாலும், சாப்பிட வேண்டுமே என்ற கடமைக்காக ஆரோக்கியம் இல்லாத உணவு வகைகளை அவ்வப்போது உள்ளே போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இது தான் பசியில்லாத வாழ்க்கைக்கு முதல் படி.

தொடக்கத்தில் உணவுக்காக தொடங்கிய வேட்டை, இன்றைக்கு பதுக்கல் என்ற பேராசையில் முடிந்திருக்கிறது. அதன் பயனே பசியின்மை. ஒரு சாண் வயிறு தான் வாழ்க்கையின் தரத்தை தீர்மானிப்பது முதல் அதிகாரத்தை கைப்பற்ற துடிப்பது வரை செல்கிறது. கால சுழற்சியில் பசி, உணவு ஆகிய இரண்டின் தன்மையும் மாறிவிட்டது. உணவின் தன்மை மாறியதாலேயே பசி மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.

நல்ல பசிக்கு நல்ல உணவே எரிபொருள். அதனால் ரசாயன உரம் பயன்படுத்தப்படாத, நச்சுத்தன்மை இல்லாத உணவை தேடி உண்போம். அதற்கு பசியை உணர வேண்டும். பசியை மதிக்க வேண்டும். எல்லோருக்கும் நல்ல உணவு தேவை. அந்த நல்ல உணவை தரும் மண்ணை மறந்துவிட முடியுமா?

சர்வதேச மண் வள ஆண்டு என 2015-ம் ஆண்டை ஐ.நா. சபை அறிவித்திருந்தது. பூமியில் 75 சதவீதம் நீரால் சூழப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 25 சதவீதத்தில் 15 சதவீதம் மட்டுமே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றது. அதில் விவசாயம் செய்ய முடியாது. எஞ்சிய 10 சதவீத நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்து, அவற்றின் மூலமே மனிதர்கள் வாழ முடியும்.

அந்த நிலத்தையும் மண் வளத்தையும் பாதுகாத்து, அடுத்த சந்ததிகளுக்கு ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ரசாயன உரங்களை தெளிக்காமல், இயற்கை முறையில் மண்ணை பக்குவப்படுத்தும் விவசாயி தான் என்றென்றைக்கும் நிலைத்திருப்பார். இந்த மண்ணும் மக்களும் நிலைத்திருப்பார்கள் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகள்