3.42 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி

2018-19-ஆம் நிதி ஆண்டில் 3.42 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி

Update: 2019-04-27 02:19 GMT
உள்நாட்டில், 2018-19-ஆம் நிதி ஆண்டில் (ஏப்ரல்-மார்ச்) 3.42 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகி இருக்கிறது. ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களின் எண்ணெய் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணமாகும்.

ஓ.என்.ஜி.சி.

நம் நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈட்டுபட்டு வருகின்றன.

கடந்த நிதி ஆண்டிற்கு 3.70 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த ஆண்டில், நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தி 3.42 கோடி டன்னாக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 4 சதவீதம் குறைவாகும். இதில் ஓ.என். ஜி.சி. நிறுவனத்தின் உற்பத்தி (2.23 கோடி டன்னில் இருந்து) 2.1 கோடி டன்னாக குறைந்துள்ளது. அடுத்து ஆயில் இந்தியாவின் உற்பத்தி 2.5 சதவீதம் சரிவடைந்து 33 லட்சம் டன்னாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தி 98 லட்சம் டன்னாக உள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது உற்பத்தி 2 சதவீதம் குறைந்து இருக்கிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

சென்ற நிதி ஆண்டில், ஒட்டுமொத்த அளவில் 14,047 கோடி டாலருக்கு எண்ணெய் இறக்குமதி ஆகி உள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 29 சதவீதம் அதிகமாகும். அப்போது இறக்குமதி 10,866 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில் எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 3 சதவீதம் உயர்ந்து 36,697 கோடி டாலராக இருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் அது 35,692 கோடி டாலராக இருந்தது.

2018-19-ஆம் நிதி ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், வரலாறு காணாத அளவிற்கு, 11,500 கோடி டாலரை எட்டி இருக்கும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு இலக்கு

உள்நாட்டில் கச்சா எண்ணெய் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே அதற்கான தேவையும் மிக அதிகமாக இருக்கிறது. எனினும், 2022-ஆம் ஆண்டிற்குள் நமது மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் செய்திகள்