மனஅழுத்தம் நீக்கும் மகிழ்ச்சியான கல்விப் பயணத்தில்..

பெண்களுக்கு மத்தியில் ஆர்.அர்ச்சனா வித்தியாசமானவர்.

Update: 2019-05-19 07:24 GMT
என்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கும்போதே, அடுத்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி கைநிறைய சம்பளம் வாங்கும் வேலைக்கு செல்லவேண்டும் என்ற கனவில் இருக்கும் பெண்களுக்கு மத்தியில் ஆர்.அர்ச்சனா வித்தியாசமானவர். படித்து முடித்து வேலைக்கு செல்ல விரும்பாத இவர், என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே தனது தந்தையிடம் போய், படித்து முடித்துவிட்டு தனக்கு வேலைக்கு போகும் எண்ணமில்லை என்று கூறியிருக்கிறார்.

வேறு என்ன செய்யப்போகிறாய்? என்று அவர் கேட்க, ‘நான் ஒரு பள்ளிக்கூடம் நடத்தப்போகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ‘பள்ளிக்கூடம் நடத்த நிறைய அனுபவம் வேண்டுமே, உனக்கு என்ன அனுபவம் இருக்கிறது?’ என்று தந்தை கேட்க உடனே, தான் ஒரு வருடமாக சேகரித்துவைத்திருந்த உலகத்திலே சிறந்த கல்வி முறைகளை பற்றிய தகவல்களை எல்லாம் தந்தையிடம் கொடுத்திருக்கிறார்.

‘அவைகளில் இருந்து நமது குழந்தைகளுக்கு பொருத்தமான புதிய பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறேன். அதை நடைமுறைப்படுத்தவே நான் பள்ளிக்கூடம் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்’ என்று கூறி, தந்தையிடம் புதிய பாடத்திட்டங்களை பற்றி விளக்கி அவரது சம்மதத்தை பெற்றிருக்கிறார்.

20 வயதில் கல்விநிலையம் நடத்த ஆசைப்பட்டு, 21 வயதில் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு, 22 வயதில் சர்வதேச கல்வி நிலையம் ஒன்றில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றுவிட்டு, 23 வயதில் சான் அகாடமி என்ற கல்வி நிலையத்தை தொடங்கி நடத்திக்கொண்டிருக்கும் ஆர்.அர்ச்சனாவுக்கு இப்போது 34 வயது. அவர் நடத்திக்கொண்டிருக்கும் கல்வி நிலையங்களுக்கு 11 வயது. சிறந்த கல்வி நிலையத்திற்கான விருது, சிறந்த கல்வி நிறுவனத்தை நடத்தும் ஆளுமை நிறைந்த பெண்மணிக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு சொந்தக்காரராகியிருக்கிறார்.

சிறந்த கல்வி நிலையம் நடத்தும் ஆளுமை நிறைந்த பெண்மணிக்கான ஐ.நா. விருதை பெற்றிருக்கும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, அவரது வெற்றிகரமான கல்விப் பயணத்தை பற்றி கலந்துரையாடினோம்!

“எங்கள் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு. நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். எனது பெற்றோர் ராஜாசங்கர்- குமுதினி. எனது தம்பி பெயர் அர்ஜூன். எனது தாத்தா ராமஜெயம் துணை கலெக்டராக பணிபுரிந்தவர். என் அத்தைகளும் நிறைய படித்தவர்கள். அத்தைகளில் வைதேகி கல்லூரி முதல்வராகவும், உஷா ஆசிரியையாகவும், தாரிணி உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உள்ளனர். என் தந்தை பி.காம். படித்துவிட்டு சுயதொழில் செய்கிறார்.

நான் நன்றாக படிப்பேன். பிளஸ்-டூவில் 97 சதவீத மதிப்பெண் பெற்றேன். ஆனாலும் டாக்டராகவோ, என்ஜினீயராகவோ நான் விரும்பவில்லை. அதே நேரத்தில் சிறுவயதிலே எனக்கு சமூக சேவை ஆர்வம் அதிகமாக இருந்தது. என் தாத்தாவும், ‘எல்லோரும் போகும் பாதையில்தான் நீயும் போகவேண்டும் என்பதில்லை. ஆனால் நீ எதை செய்தாலும் அது சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும். வித்தியாசமாக சிந்தித்து புதுமையாக ஏதாவது செய்’ என்னை ஊக்குவித்தார்.

தந்தையும் எனக்கு முழுசுதந்திரம் தந்தார். சுறுசுறுப்பும், நிர்வாகத்திறனும் சிறு வயதிலே என்னிடம் இருந்ததால் படிக்கும்போதே நான் ஸ்கூல் லீடரானேன். அதன் மூலம் தலைமைப்பண்பை வளர்த்துக்கொண்டேன். பள்ளிப்பருவத்திலே எதையும் திட்டமிட்டு சிறப்பாக செய்துமுடித்து ஆசிரியர் களின் பாராட்டைப் பெற்றுவிடுவேன்” என்று கூறும் ஆர்.அர்ச்சனாவின் வாழ்க்கையில் பதினைந்து வயதில் ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் இவரை கல்விச் சாதனையாளராகவும், சிறந்த விருதுக்குரியவராகவும் மேம்படுத்தியிருக்கிறது.

“15 வயதில், அப்பா என்னை ஒருமுறை லண்டனுக்கு அழைத்துச் சென்றார். நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்குள்ள கல்வி நிலையங்கள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், வாசிப்பு சாலைகளுக்கு சென்று பார்வையிடுவேன். லண்டனில் உள்ள பள்ளிக்கு நான் சென்ற அன்று சிறுவர், சிறுமியர்களுக்கான ‘ஆர்ட் கிளாஸ்’ நடந்துகொண்டிருந்தது. அங்கு மாணவ- மாணவியர் அனைவருமே சிரித்த முகத்தோடு கலகலப்பாக காணப்பட்டனர். இங்குள்ள வகுப்பறைகளில் இறுக்கமான முகத்துடனே மாணவ, மாணவிகளை பார்த்திருந்த எனக்கு அது ஆச்சரியத்தை தந்தது.

அந்த மாணவர்கள் கையில் ஆசிரியர் களிமண்ணை கொடுத்து, ‘நீங்கள் எதை செய்யவேண்டும் என்று விரும்பு கிறீர்களோ அதை செய்யுங்கள்’ என்றார். அவர்கள் பொம்மை போன்றும், பிராணிகள் போன்றும், இயந்திர மனிதர்கள் போன்றும் அவரவர் எண்ணங்களுக்கு வடிவம்கொடுத்து ரசித்தபடி செய்து முடித்து ஆசிரியரிடம் கொண்டு போய் கொடுத்தார்கள். ஒவ்வொன்றையும் கவனமாக பார்த்த ஆசிரியர், அவற்றை செய்த மாணவர்களை தனித்தனியாக அழைத்து பாராட்டினார். பின்பு அதில் சின்னச்சின்ன திருத்தங்களையும் செய்தார். அதை ஏற்றுக்கொண்ட மாணவர்களின் முகத்தில் முன்பைவிட கூடுதல் மகிழ்ச்சி தென்பட்டது.

அதுவே நமது வகுப்பறை என்றால் களிமண்ணை மாணவர்கள் கையில்கொடுக்கும் ஆசிரியர், அவருக்கு பிடித்த ஒரு உருவத்தின் பெயரை கூறி, அதை மட்டுமே செய்யும்படி கூறுவார். எந்த மாணவன் அவர் சொல்வதை நன்றாக செய் கிறானோ அவனை மட்டும் அழைத்து பாராட்டுவார். அதாவது ஆசிரியர் சொல்வதை செய்பவரே திறமையானவர் என்ற கருத்து இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் மாணவர்களை சுயமாக சிந்திக்கவும் செயல்படவும் விட்டு, அதில் அவர்களது திறமையை கண்டறிந்து, அதனை மெருகேற்றுகிறார்கள். அதனால்தான் அங்குள்ள மாணவர்கள் புன்னகையோடு ரசித்து கல்வி பயில்கிறார்கள். இங்குள்ள மாணவர்கள் புன்னகையை இழந்த நிலையில் கடமைக்கு கல்வி பயில்கிறார்கள் என்பதை அறிந்தேன்.

முதல் நாள் பள்ளிக்குச் செல்ல சில குழந்தைகள் அழுவார்கள். குழந்தை ஏதோ பயந்து அழுகிறது என்று அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ‘படிக்கும் காலம் முழுவதும் பிள்ளைகள் அழுவது போன்ற மனநிலையில் இருப்பது யாருடைய குற்றம்?’ என்ற கேள்வி அப்போதே என் மனதில் எழுந்துவிட்டது. அதோடு படிக்கும்போதே குழந்தைகளுக்கு மனஅழுத்தமும் வந்துவிடுகிறது என்ற செய்தி என்னை கலங்கடித்தது. ‘மன அழுத்தம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக குழந்தைகள் கல்வி பயிலும் சூழலை நம்மால் உருவாக்க முடியுமா?’ என்ற சிந்தனை எனக்குள்ளே எழுந்தது.

அதற்கு பதினைந்து வயதில் விடைதேடத் தொடங்கினேன். என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, விடைகிடைக்கும் காலம் கனிந்தது. உலக அளவில் உள்ள கல்வி நிலையங்களை பற்றியும், அங்குள்ள பாடத்திட்ட முறைகளை பற்றியும் இன்டர்நெட் மூலமும், வெளிநாடுகளில் இருக்கும் என் தோழிகள் மூலமும் தகவல்களை சேகரித்தேன். அவைகளை பற்றி கல்வியாளர்கள் சிலரிடம் விவாதித்து சிறந்ததை தேர்ந்தெடுத்து, ஒருங்கிணைத்து ஆய்வறிக்கை போன்று தயாரித்தேன். அதைதான் என் அப்பாவிடம் கொண்டுபோய் கொடுத்து, பள்ளிக்கூடம் நடத்தவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினேன். அப்பா உடனே, அதற்கு ஆதரவு கொடுத்துவிட்டு, ஒரு நல்ல ஆலோசனையும் கொடுத்தார்..” என்றார், அர்ச்சனா.

அப்பா கொடுத்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட இவர் கள அனுபவத்திற்காக, ஐசரி கணேஷ் நடத்தும் வேல்ஸ் சர்வதேச பள்ளியில் சேர்ந்து ஒரு வருடம் ஆசிரியையாக பணியாற்றி குழந்தைகளின் மனநிலை, ஆற்றல், குணாதி சயங்கள் மற்றும் நிர்வாகத்திறன் போன்றவைகளை கற்றுத் தேர்ந்திருக்கிறார். தினமும் வகுப்பறைக்கு சென்று குழந்தை களுக்கு பாடமும் நடத்தியுள்ளார்.

“கள அனுபவங்களை பெற்று எனது திறமைகளை மெருகேற்றிக்கொண்டபின்பு, 22 வயதில் சான் அகாடமியை முதலில் வேளச்சேரியில் தொடங்கினேன். நான் உருவாக்கிய பாடத்திட்டத்தில் 3 முதல் 6 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அவர்களுக்கு மண்ணில் விளையாடவும், தண்ணீரில் விளையாடவும் அனுமதி உண்டு. அதோடு கிரகங்கள், சோலார் சிஸ்டம், வாழ்வியல் பொதுஅறிவு விஷயங்களையும் முனைப்போடு புதுவிதமாக கற்றுக்கொடுத்தோம்.

படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தேவையை கருதி பள்ளிக்கரணையில் இரண்டு இடங்களிலும், தாம்பரத்திலும் பள்ளிகளை தொடங்கினோம். தற்போது ஐந்தாயிரம் மாணவ- மாணவிகள் எங்களிடம் பயின்று கொண்டிருக்கிறார்கள். சிறந்த கல்வியோடு, விளையாட்டு, தற்காப்புக்கலை, அன்றாட வாழ் வியல் பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் போன்றவைகளையும் வளர்த்து, அவர்கள் மகிழ்ச்சியாகவும் மிகச் சிறந்த மனிதர்களாகவும் வாழ தேவையான அனைத்து தகுதிகளையும் உருவாக்குகிறோம். அதை நாங்கள் இந்த சமூகத்திற்கு செய்யும் சேவையாக நினைக்கிறோம். எங்கள் மாணவர்கள் விளையாட்டு மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதனை நிகழ்த்துகிறார்கள். பரிசுகளையும், விருதுகளையும் குவிக்கிறார்கள்..” என்று கூறும் அர்ச்சனா தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் புலமை பெற்றிருக்கிறார். இவரது கணவர் ஆனந்த். இந்த தம்பதிகளுக்கு ஆன்யா, ஆரவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். சமூக சேவையிலும் இவர் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடுகிறார். இவர் எம்.பி.ஏ.யும் படித் திருக்கிறார். அர்ச்சனாவின் குடும்ப நிர்வாகத்திற்கு மாமியார் சந்திரா உறுதுணையாக இருக்கிறார்.

“முன்பு கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. தாத்தா, பாட்டிகள் உள்பட அனுபவம் பெற்ற பலரும் அந்த குடும்பத்தில் இருப்பார்கள். கூட்டுக்குடும்பங்களில் இருந்து வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொண்டார்கள். அதனால் பள்ளிகள் பாடங்களை மட்டும் கற்றுக் கொடுத்தால் போதும் என்ற நிலை இருந்தது. இப்போது கூட்டுக்குடும்பங்கள் இல்லை. பெற்றோரும் ஆளுக்கொரு பக்கம் வேலைக்கு செல்பவர்களாக இருக் கிறார்கள். இன்னொரு புறத்தில் கணவரை இழந்த பெண்கள் அல்லது விவாகரத்து செய்த பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அதனால் தாயாரிடம் வளரும் குழந்தை களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட பல்வேறு சூழ்நிலைகளால் இன்றைய மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு விதங்களில் மன அழுத்தம் அதிகரிக்கிறது. வாழ்வியல் பிரச்சினைகளும் அவர்களை சூழ்கிறது. அவர்கள் அதில் இருந்து சரியான முறையில் மீண்டு வர, பள்ளிகள் கூடுதலாக பல விஷயங்களை அவர்களுக்கு கற்றுத்தரவேண்டியதிருக்கிறது. அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும், சமயோசித ஆற்றலையும், எதையும் சமாளிக்கும் பக்குவத்தையும் கல்வியோடு சேர்த்து புகட்ட வேண்டியதிருக்கிறது. அதைதான் நாங்கள் மனமுவந்து செய்துகொண்டிருக்கிறோம்” என்கிறார், அர்ச்சனா.

இவரது கல்விச் சேவைப் பணி சிறக் கட்டும்.

மேலும் செய்திகள்