எய்ட்ஸ் மரபணுத்திருத்த ஆய்வு ஏற்படுத்திய சிக்கல்

மருத்துவம் என்பது மனித வாழ்க்கையின் வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல

Update: 2019-05-20 04:00 GMT
மருத்துவத்தின் அடிநாதமாக இருப்பது அறிவியல் ஆய்வுகள்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அறிவியல் ஆய்வுகளை பொதுநன்மைக்காக மேற்கொண்ட காலம் மாறி, அவற்றை சுய லாபத்துக்காகவும், புகழுக்காகவும் மேற்கொண்டு மனித உயிர்களை தவறான ஆய்வுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஆபத்தான கலாசாரம் பெருகிவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய உதாரணமாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீன விஞ்ஞானி ஹி ஜியான்குயி என்பவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 7 ஆண்கள் மற்றும் எய்ட்ஸ் நோய் இல்லாத 7 பெண்கள் ஆகியோரின் சிசுக்களில் எய்ட்ஸ் நோய் ஏற்படுத்தும் (CCR5) மரபணுவை (CRISPR) மரபணுத் திருத்த தொழில்நுட்பம் மூலமாக நீக்கியதாகவும், அந்த குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்துவிட்டன என்றும் செய்தி வெளியானது.

இந்த செய்தியை பார்த்த உலக மரபியல் விஞ்ஞானிகள் பலரும் ஆச்சரியம் அடைந்தனர். ஏன்என்றால், (CRISPR) மரபணுத் திருத்த தொழில்நுட்பம் தொடக்கநிலையில் உள்ளது. அதன் நீண்ட கால விளைவுகள், மற்றும் ஆபத்தான பின்விளைவுகள் குறித்த புரிதல் இல்லை. இந்த நிலையில் ஹி ஜியான்குயியின் மனித மரபணுத் திருத்த ஆய்வு நெறியற்றது என்று பல விஞ்ஞானிகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதற்கிடையில், ஹி ஜியான்குயியின் மரபணுத் திருத்த ஆய்வில் பல்வேறு அறிவியல் கோளாறுகள் இருக்கின்றன என்று சீன அறிவியல் கல்விக் கழகத்தைச் சேர்ந்த மரபியல் விஞ்ஞானிகளான வாங் ஹாவோயி மற்றும் யாங் ஹுயி ஆகியோர் கூறியுள்ளனர். ஹி ஜியான்குயியின் மனித மரபணுத் திருத்த ஆய்வுகள் அவர் விளக்கியுள்ளது போல செயல்படாது என்றும், அந்த ஆய்வுகள் மூலமாக பிறந்துள்ள லூலூ மற்றும் நானா ஆகிய இரு சீனக் குழந்தைகளும் ஆபத்தான பல்வேறு ஆரோக்கியக் கேடுகளை சந்திக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அது சரி, இந்த ஆய்வு எப்படி அறிவியல்பூர்வமாக தவறானது அல்லது இதில் என்னென்ன அறிவியல் கோளாறுகள் உள்ளன?

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கும், எய்ட்ஸ் நோய் இல்லாத தாய்க்கும் பிறந்த குழந்தையின் (CCR5 எனும்) மரபணுவை நீக்கியுள்ளது ஹி ஜியான்குயியின் ஆய்வு. இதன்மூலம் அந்த குழந்தைகள் வளர்ந்தபின்னர் அவர்களுக்கு எய்ட்ஸ் வராது என்பது தான் ஜியான்குயியின் வாதம்.

ஆனால், மருத்துவ ரீதியாக, ஆபத்தான (CRISPR) மரபணுத் திருத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக, புறக்கருக்கட்டல் (Invitro fertilization) உள்ளிட்ட நவீன கருத்தரித்தல் முறைகளைக் கையாண்டுள்ளனர். குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் ஹெச்.ஐ.வி தோற்று ஏற்படாமல் பாதுகாத்தால் மட்டுமே போதுமானது என்று கருதியுள்ளனர். இதனால் பயன் எதுவும் இல்லாதது மட்டுமல்லாமல், மிகவும் ஆபத்தான பல பின்விளைவுகளை வாழ்க்கை முழுவதும் அந்த குழந்தைகள் சந்திக்க வேண்டும் என்றும் வாங் மற்றும் யாங் கூறியுள்ளனர்.

அந்த ஆபத்தான பின்விளைவுகள் பின்வருமாறு:

1) (CCR5) மரபணுவை உடலில் இருந்து நீக்குவதால் ஆசிய மக்களுக்கு என்னென்ன ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்த எந்தப் புரிதலும் தற்போது இல்லை.

2) (CCR5) மரபணு உடலில் இல்லாமை அல்லது அது மரபணுமாற்ற அடைவது காரணமாக அனைத்து ஹெச்.ஐ.வி வைரஸ்களுக்கும் எதிரான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவது இல்லை.

3) இந்த மரபணுத் திருத்த ஆய்வு மேற்கொள்வதற்கு அடிப்படையாக, (CCR5) மரபணு நீக்கப்பட்ட எலிகள் மீதான ஆய்வு முடிவுகளை ஹி ஜியான்குயி பயன்படுத்தியது தவறு என்றும், எலி மீதான ஆய்வு முடிவுகள் மட்டுமே கொண்டு மனித ஆய்வுகளை மேற்கொள்வது அறிவியல் ஆய்வு வட்டத்தில் ஏற்கப்படுவதில்லை என்றும் வாங் மற்றும் யாங் ஆகியோர் கூறியுள்ளனர்.

4) (CRISPR/Cas9) மரபணுத் திருத்த தொழில்நுட்பமானது, எதிர்பாராதவிதமாக ஆய்வில் தேர்ந்தெடுக்கப்படாத வேறு பல மரபணுக்களை மாற்றிவிடும் ஆபத்துள்ள தொழில்நுட்பம். எனவே, அத்தகைய பல்வேறு மரபணு மாற்றங்கள் நோயாளியின் உடலில் எந்தவிதமான ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று தெரியாமலேயே ஹி ஜியான்குயி மரபணுத் திருத்தம் செய்துள்ளது அறிவியல் அடிப்படையற்ற செயல்.

மரபணு திருத்த ஆய்வில் ஏற்படுத்திய இந்த சிக்கல் இதுதொடர்பான ஆய்வில் கண்காணிப்பு தேவை என்பதை வலியுறுத்துகிறது.

- தொகுப்பு: ஹரிநாராயணன்

மேலும் செய்திகள்