மகிழ்ச்சி தரும் சிக்மகளூரு

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு சுற்றுலா பயணிகளைக் கவரும் முக்கியமான இடங்களுள் ஒன்றாகும்.

Update: 2019-05-22 11:59 GMT
சிக்மகளூரு பகுதி முழுவதுமே கண்டுகளிக்க வேண்டிய பல பகுதிகளைக் கொண்டுள்ளது. மிகச் சிறந்த மலை வாசஸ்தலங்களுள் இதுவும் ஒன்றாகும். அழகிய அருவிகளும் இங்குள்ளன. காபி தோட்டங்களும், அடர்ந்த வனப் பகுதிகளும், வன விலங்கு சரணாலயங்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் பல உள்ளன. இங்கு தங்கி காண வேண்டிய பகுதிகள் பல உள்ளன.

காளத்தி அருவி சிக்மகளூருவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அருமையான அருவி. இந்த அருவியின் உயரம் 122 மீட்டராகும். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களுள் இதுவும் ஒன்றாகும்.

இதேபோல ஹெப்பா அருவியும் இங்குள்ள பிரபலமான அருவிகளில் ஒன்று. இதன் உயரம் 168 மீட்டராகும். மற்றொரு அருவியான ஹொன்னம்மா அருவி 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பாத்ரா டைகர் சரணாலயம் இந்தியாவில் உள்ள இயற்கை சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. நீண்டு வளர்ந்த மூங்கில் காடுகளிடையே பாதுகாக்கப்பட்ட இந்த வனத்தில் புலிகளையும் அவை வாழுமிடங்களில் கண்டு ரசிக்கலாம். இப்பகுதியில் காபி எஸ்டேட்டும் உள்ளன. இந்த வனத்தில் புலி, மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம். இதேபோல 250 அரிய வகை பறவையினங்களும் இங்குள்ளன.

இங்குள்ள பகுதிகளில் ஜாக்ரா பள்ளத்தாக்கு மிகவும் பிரபலமானது. பார்ப்பதற்கே அழகிய ரம்மியமான பசுமையான மலைப் பிரதேசமாகும். கெம்மனஹூன்டியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. சாகச பயணம் மற்றும் வன விலங்கு ஆர்வலர்களை அதிகம் கவரும் பகுதியாக இது உள்ளது. மலையேற்ற பயணம் மேற்கொள்வோர் ஜாக்ரா மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளை அதிகம் விரும்புவர். இங்குள்ள பகுதிகளில் முல்லையான கிரி மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 6,355 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மிக உயரமான மலையாக இது கருதப்படுகிறது. ஹார்ஸ் வே எனப்படும் குதிரை வழி மிகவும் குறுகலான பகுதியாகும்.

மன்னர் காலத்தில் ராஜாக்கள் குதிரைகளில் சவாரி செய்தபடி இங்கு மான் வேட்டைக்கு செல்வார்களாம். இங்கு சென்று சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இங்குள்ள ரோஸ் கார்டன் பூங்கா தோட்டக்கலை துறையினரால் பராமரிக்கப் படுகிறது. இங்கு பல வகையான ரோஜா பூக்களை காண முடியும். இயற்கையை ரசித்தபடி சற்று இளைப்பார ஏற்ற இடம் இதுவாகும். முத்தோடி வன விலங்கு சரணாலயமும் இப்பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் இந்த சரணாலயம் செல்வதற்கு 3 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல விலங்குகளை இங்கு காண முடியும். மனதுக்கு இதமளிக்கும் சுற்றுலா பகுதிகளில் சிக்மகளூருவும் ஒன்றாகும்.

மேலும் செய்திகள்