‘மூன்றாம் மனிதர்’ தலையீட்டால் மூச்சுமுட்டும் குடும்பங்கள்..

கணவர் கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்தார்

Update: 2019-05-26 06:31 GMT
கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார் கணவர். மனைவி குத்துக்கல் போன்று அமர்ந்திருந்தாள். அவர் அழுதுகொண்டே சொன்ன கசப்பான உண்மை உள்ளபடியே சமூகத்திற்கு கவலையளிப்பதுதான். அதாவது அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்திருக்கிறார்கள். அவர் நாற்பது வயதை தொட்டுக் கொண்டிருக்கிறார். மனைவிக்கு முப்பது வயது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

“எங்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியிருக்கிறது. நான் இவளுக்கு எந்த குறையும் வைக்கவில்லை. நான் முதலில் சம்பளத்திற்குதான் லாரி ஓட்டினேன். இவளை திருமணம் செய்த பின்பு சொந்தமாக லாரி வாங்கியதால் இவளை என் உள்ளங்கையில் வைத்து தாங்கினேன். அவ்வப்போது லோடு ஏற்றிக் கொண்டு வெளியூர் சென்றுவிடுவேன். அப்போது இவளுக்கும், இவளைவிட ரொம்ப வயது குறைந்த கல்லூரி மாணவன் ஒருவனுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது..” அதற்குமேல் அவரால் பேசமுடியவில்லை. தன்னிலை மறந்து குலுங்கிக் குலுங்கி அழுதார்.

இவர் லோடு ஏற்றிக்கொண்டு வட மாநிலத்திற்கு சென்றிருந்தபோது, இவள் திடீரென்று அந்த இளைஞனோடு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறாள். குழந்தையையும் தன்னோடு அழைத்துச்சென்றிருக்கிறாள். பத்து நாட்கள் கடந்த பின்பே இவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. எப்படியோ அலைந்து திரிந்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளார்.

அங்கே சென்றதும் குழந்தை அப்பாவிடம் ஓடிவந்துவிட்டது. மனைவியோ அந்த இளைஞனிடம் இருந்து பிரிய மறுத்திருக்கிறாள். ஆனால் கல்லூரி படிப்பை தொடரமுடியாத கவலையிலும், தனது ஏழ்மை நிலையை பற்றிய வருத்தத்திலும் அந்த இளைஞன் இருந் திருக்கிறான். தப்பு செய்துவிட்டோமே எப்படி தப்பிப்பது என்ற எண்ணத்தில் இருந்த அந்த இளைஞனிடம் இவர், வாழ்க்கையின் யதார்த்தத்தையும் அவனது எதிர்காலத்தையும் பற்றி எடுத்துக்கூறியிருக் கிறார். அதனால் அவன், அவளுடனான தனது தவறான உறவில் இருந்து விடுபட முன்வந்து, ‘இனிமேல் தன்னை தொடர்பு கொள்ளவேண்டாம்’ என்று அவளிடம் கூறிக்கொண்டு, அந்த வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறான்.

அதன் பிறகு இவளிடம், அவமானமாக இருக்கிறதே இப்படி ஏன் நடந்துகொண்டாய்? என்று கேட்டு, குழந்தையின் எதிர்காலத்தை எல்லாம் எடுத்துச்சொல்லி, அவளை மன்னித்து, ஏற்று தன்னோடு அழைத்து வந்திருக்கிறார்.

கண்கலங்க பேசிக்கொண்டிருந்தவரிடம், ‘இப்போது என்ன பிரச்சினை?’ என்று கேட்டதும், மீண்டும் கண்ணீர் பொங்கிவந்தது அவருக்கு. ‘இவள் என்னோடு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதில்லை. அடிக்கடி தேவையே இல்லாமல் குழந்தையை அடிக்கிறாள். அவள் வாழ்க்கையை நான் நாசப்படுத்திவிட்டேன் என்றும், அந்த இளைஞனிடம் இருந்து பிரித்து அவள் மகிழ்ச்சியை நான் கெடுத்துவிட்டதாகவும் சொல்கிறாள். என்னால் நிம்மதியாக லாரி ஓட்டும் தொழிலை செய்யமுடியவில்லை. பயத்துடன் வாழ்கிறேன்’ என்றார்.

இதே போன்று இன்னொரு சம்பவம். 50 வயது அரசு அதிகாரியோடு, 45 வயதான அவரது மனைவி வந்திருந்தார். அந்த அதிகாரியிடம் துறை சார்ந்த பயிற்சி ஒன்றுக்கு 28 வயதான இளம் பெண் வந்திருக்கிறாள். அவர்களுக்குள் தேவையற்ற நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அவரது மனைவி என்னிடம், ‘எங்களுக்கு திருமணமாகி 25 வருடங்கள் ஆகியிருக்கின்றன. இவரது உடலளவிலோ, மனதளவிலோ சின்னச்சின்ன மாற்றங்கள் ஏற்பட்டால்கூட நான் கண்டுபிடித்துவிடுவேன். திடீரென்று இவர் தூக்கமின்மையால் அவதிப்பட்டார். எதையோ நினைத்து பயம்கொள்ளத் தொடங்கினார். அடிக்கடி நள்ளிரவு கடந்த பின்பு வீட்டிற்கு வருவது வழக்கமானது.

நான் உண்மையை சொல்லுங்கள் என்று கட்டாயப்படுத்திய பின்பு தனது வாழ்வியல் முறை மாற்றங்களுக்கு அந்த பெண்ணோடு ஏற்பட்டிருக்கும் தொடர்புதான் காரணம் என்றார். எனக்கு முதலில் ஆத்திரம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு அந்த பெண்ணிடம் போய் பேசினேன். அவள் ஏழைப்பெண். இவரது பதவியையும், இவரிடம் புழங்கும் பணத்தையும் பார்த்து சுயநலத்தோடு பழகியிருக்கிறாள். எங்களுக்கு திருமண வயதில் மகன் இருக்கிறான். எல்லாவற்றையும் பேசி, அவளுக்கு உண்மையை புரியவைத்தேன். கொஞ்சம் பணம் செலவானது. அவளும் விலகிவிட்டாள். இவரும், இனி ஒழுங்காக இருப்பேன் என்றார்.

ஆனால் இவர் இப்போது நிம்மதியாக இல்லை. முன்புபோல் நன்றாக உடை அணிவதில்லை. மகிழ்ச்சியாக நடந்துகொள்வதில்லை. என்னோடு வெளியே வருவதும் இல்லை. எப்போதும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார். அலுவலகத்திற்கு போகச்சொன்னால், விருப்ப ஓய்வு பெற்றுவிடப்போவதாக சொல்கிறார். அவ்வப்போது அந்த பெண்ணின் நினைவுகளில் மூழ்கி, அவள் எங்கே இருக்கிறாள் என்றெல்லாம் இவரது அலுவலக நண்பர்களிடம் விசாரிக்கிறார். எங்கள் மகனுக்கு இதெல்லாம் தெரிந்துவிட்டால் இவரது மானம், மரியாதை எல்லாம் காற்றில் பறந்துவிடும். இவரே தன்னை காட்டிக்கொடுத்து மரியாதையை கெடுத்துக்கொள்வார் போல் தெரிகிறது. நான் என்ன செய்வது?’ என்று கேட்டார்.

இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய சமூக பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கிறது. இது குடும்பத்தின் கட்டுறுதியையும், கணவனும் மனைவியும் ஒருவர் இன்னொருவர் மீது வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையையும் அசைத்துப்பார்க்கிறது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், ‘நம்மில் யாராவது ஒருசிலரது வாழ்க்கையில்கூட இப்படிப்பட்ட தொடர்புகள் ஏற்படவும் செய்யலாம்’ என்ற முன்ஜாக்கிரதை உணர்வு ஆணுக்கும், பெண்ணுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தொடர்பு ஏற்பட்டால் இருக்கிற நிம்மதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் போய்விடும் என்பதும் அவர்களுக்கு புரிகிறது. அதனால் பெரும்பாலானவர்கள், முதலிலே தேவைக்கு அதிகமாக எதிர்பாலினரிடம் நெருங்குவதில்லை. எல்லையை வகுத்துக்கொண்டு அதற்கு தகுந்தபடி பழகிக்கொள்கிறார்கள்.

இரண்டாவது விஷயம்! அந்த முன்ஜாக்கிரதை உணர்வையும் மீறி கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்போ, மனைவிக்கு இன்னொரு ஆணுடன் தொடர்போ ஏற்பட்டுவிட்டாலும், அதை அறியும்போது பெரும்பாலானவர்கள் ஆத்திரப்பட்டு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதில்லை. உடனே அவசரப்பட்டு விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டி, அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்குவதில்லை. அவர்கள் நிதானமாக அந்த பிரச்சினையை கையாள முன்வருகிறார்கள்.

‘முன்பின் யோசிக்காமல் எப்படியோ அதில் சிக்கியுள்ளார். எப்படியாவது அதில் இருந்து அவரை மீட்டுக்கொண்டுவர வேண்டும்’ என்று நினைத்து, மீட்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள். அவர் செய்த குற்றத்தை மன்னித்து அவரை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.

அப்படி ஏற்றுக்கொண்ட பின்பு என்ன நடக்கிறது? அவர்கள் எவ்வளவு கவனமாக மீதமுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும்? என்பதுதான் இப்போது நாம் சொல்ல வருகிற விஷயங்கள்.

பிரச்சினைக்குரிய தொடர்பில் இருந்து தனது வாழ்க்கைத் துணையை பிரித்து, அவரை மீண்டும் தன்னோடு சேர்த்துக்கொள்வதற்கு (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) மிகுந்த மனப்பக்குவம் தேவை. ஆனால் எப்போது அவரை ஏற்றுக்கொள்கிறோமோ அப்போதே நடந்து முடிந்த அந்த பழைய சம்பவங்களை முழுமையாக மனதில் இருந்து அழித்துவிட வேண்டும். பார்வையாலோ, பேச்சாலோ, செயலாலோ, ‘நீங்கள் அப்படிப்பட்ட ஆள்தானே’ என்ற அர்த்தம் தொனிக்கும் சூழலை உருவாக்கிவிடக்கூடாது. குத்திக்காட்டும் மனநிலை உருவாகிவிட்டால், மீண்டும் அவர்கள் எட்டிப்போகும் சூழ்நிலை தோன்றிவிடும்.

பெரும்பாலும் இந்த மாதிரியான தவறான தொடர்புகளில் இருந்து விலகி, தனது வாழ்க்கைத்துணையோடு வந்து சேர்ந்துகொண்டவர்களிடம் நான்குவிதமான மன அழுத்த சிந்தனைகள் உருவாகின்றன.

ஒன்று: தான் தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு.

இரண்டு: தான் செய்த தவறு வாழ்க்கைத்துணைக்கு தெரிந்துவிட்டது என்ற தலைகுனிவு.

மூன்று: பழைய தொடர்பில் இருந்தவரை (ஆண் அல்லது பெண்ணை) பற்றிய சிந்தனை.

நான்கு: தன்னை தற்போது ஏற்றுக்கொண்ட வாழ்க்கைத்துணை என்றாவது ஒருநாள் அதை சுட்டிக்காட்டி தன்னை தண்டிப்பாரோ என்ற கவலை.

இதைவைத்து பார்க்கும்போது ஏற்றுக்கொண்டவர் நிம்மதியாக இருப்பார். ஏற்றுக்கொள்ளப்பட்டவர் நிம்மதியின்றி தவிப்பார். ஒரே குடும்பத்திற்குள் இந்த தடுமாற்ற தவிப்பு அதிக நாட்கள் நீடிப்பது நல்லதல்ல. தவிப்பை அகற்றி, இடைவெளி இல்லாத நிலையை உருவாக்க கணவன்-மனைவி இருவரும் மனம்விட்டுப்பேச வேண்டும். அதற்கு முதலில், தங்கள் மனதில் இருக்கும் பழைய நினைவுகளையும், கசப்புகளையும் அகற்றவேண்டும். அகற்றுவதற்கு யோகா, தியானம், மியூசிக்தெரபி போன்றவைகளில் மனதை செலுத்தவேண்டும். மனதுக்கு பிடித்தவைகளில் நினைவை செலுத்தும்போது, தேவையற்ற பதிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அகலும். மனதும் புத்துணர்ச்சி பெறும். வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசும்.

மணவாழ்க்கையும், அதன் மூலம் உருவாகும் பிணைப்பும், நம்பிக்கையும் மற்ற எல்லா வற்றையும் விட மனிதர்களுக்கு உயர்ந்தது. அதில் கறைபடிந்த பின்பு துடைக்கவும் முடியும். கைதவறி விழுந்த பின்பு ஒட்டவைக்கவும் முடியும். ஆனால் அதற்கு அதிக முயற்சியும், பயிற்சியும், பக்குவமும் தேவை என்பதால் கறைபடியாமலும், கைதவறாமலும் வாழ்க்கையை காப்பதே சிறந்தது.

- விஜயலட்சுமி பந்தையன்.

மேலும் செய்திகள்